உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சிறையில் அடைக்கப்படுவர்

168 0

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி ஜனநாயக ரீதியில் போராடிவரும் அனைத்துத் தாய்மாரும் சிறையில் அடைக்கப்படுவர். எதிர்வருங்காலங்களில் தமிழ்மக்கள் தமது அடிப்படை உரிமைகள் குறித்துக் கனவிலும்கூட நினைத்துப்பாரக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.

எனவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கும் அதேவேளை, இப்புதிய சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன் சர்வதேச மன்னிப்புச்சபை உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ‘மனித உரிமைகளுக்கான பேரூந்தில் ஏறுங்கள்’ என்ற மகுடத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்தி பிரசாரத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

அந்தவகையில் இவ்வருடம் அப்பிரசாரத்தின் ஓரங்கமாக இலங்கை, எகிப்து, ஹொங்கொங், சீனா, திபெத், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் நிகழ்நிலை முறைமையிலான கலந்துரையாடலொன்றின் மூலம் ஆராயப்பட்டது.

அக்கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றுகையிலேயே லீலாதேவி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடும் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகி, 2258 ஆவது நாளாக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டபோது பெருமளவான தாய்மார் தமது அன்புக்குரியவர்களை இராணுவத்தினரிடம் கையளித்தனர். அதேபோன்று இலங்கை அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பெரும் எண்ணிக்கையானோர் தமது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தாமாகவே இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களில் பலர் காணாமல்போயுள்ள போதிலும், ‘அவர்கள் எங்கே?’ என்ற கேள்விக்குத் தற்போதுவரை இலங்கை அரசாங்கம் உரியவாறான பதிலை வழங்கவில்லை. அதன்விளைவாக நாம் சர்வதேச சமூகத்திடம் எமக்கான நீதியைக்கோரிப் போராடிவருகின்றோம்.

எமக்கு நீதியை வழங்குவதற்கெனக் கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், அவற்றினூடாக எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல.

அடுத்ததாகத் தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி ஜனநாயக ரீதியில் போராடிவரும் அனைத்துத் தாய்மாரும் சிறையில் அடைக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுகின்றது. இச்சட்டத்தின் ஊடாகக் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் முழுமையாக முடக்கப்படும். நாம் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதாகக்கூறி அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவோம். எதிர்வருங்காலங்களில் தமிழ்மக்கள் தமது அடிப்படை உரிமைகள் குறித்துக் கனவிலும்கூட நினைத்துப்பாரக்கமுடியாது.

எனவே நாம் சர்வதேச சமூகத்திடம் எமக்கான நீதியைக்கோரி மன்றாடுகின்றோம். அதேபோன்று இலங்கை இராணுவத்துக்கும் பொலிஸாருக்கும் நிதியளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்க காங்கிரஸிடம் எழுத்துமூலம் வலியுறுத்துமாறு உங்களிடம் கோரிக்கைவிடுக்கின்றோம். அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ்பெறுமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.