முப்பது வருட வரலாற்றுப் பாதையில் முத்துவிழாக் கண்ட பேர்லின் தமிழாலயம்.

374 0

தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் கீழ் இயங்கும் பேர்லின் தமிழாலயத்தின் முத்துவிழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்களுடன் தமிழரின் பண்பாடான பறை இசைத்து மாணவர்கள் புடை சூழ தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர்களின் அரவணைப்புடன் தாய்மொழியாம் தமிழ் மொழியை 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டி வளர்த்த மூத்த ஆசிரியர்களின் தடம் தொடர்ந்து ஏனைய ஆசிரியர்களின் வரவேற்புடன் , Neukölln மாவட்ட மேயர் திரு மார்ட்டின் கிக்கல் அவர்களின் அங்கீகாரத்துடன் முத்து விழா ஆரம்பிக்கப்பட்டது.

பொதுச் சுடர் ஏற்றலுடன் , நாட்டுப்பற்றாளர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. மண்டபத்தின் ஒரு பக்கம் நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களும், மறுபுறத்தே தமிழ் வளர்க்கத் தொண்டாற்றியவர்களின் படங்களும் தமிழீழ நினைவுகளைச் சுமந்ததாகவும், தமிழ்மொழி வளர்த்தோரின் தடங்கள் பதிந்ததாகவும் காட்சி தந்தது.மாணவச் செல்வங்களின் ஒவ்வொரு நிகழ்வுகளும் முத்தமிழ் வெளிப்பாட்டின் மூலம் சித்தங்களை உவகை ஊட்டியது.

ஆசிரிய மணிகளின் ஆற்றலின் வெளிப்பாடாகக் கலை நிகழ்வுகளை உருவாக்கி, மாணவர்களை பயிற்றுவித்து மிகச் சிறப்பான நிகழ்வுகளாக நாடகம், நடனம், கவியரங்கத்தோடு மழலையர்களின் இதயம் கவர்ந்த நிகழ்வுகள் புலம்பெயர் மண்ணில் தமிழ் வாழும் என்பதை உணர்த்தி நின்றது.பேர்லின் தமிழாலயத்தின் 30 ஆண்டுகாலப் பணியை வாழ்த்திப் புனையப்பட்ட “செந்தமிழ் அரசாளும் தமிழாலயம்” எனும் பாடலும், அதற்காக இளம் ஆசிரியர்களின் நெறியாள்கையில் உருவாக்கம் பெற்ற நடனமும் பேர்லின் தமிழாலயத்தின் வளர்ச்சியை நிலை நிறுத்தி நின்றது.

தமிழ் காக்கும் மகத்தான செயலை மனமுவர்ந்து கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக செவ்வனே பணியாற்றி வரும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு செல்லையா லோகானந்தம் அவர்களால் மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டது. முரசறையப்பட்டு தாயகத்தின் இசை முழங்க தீப ஒளிகளுடன்
பேர்லின் தமிழாலயத்தின் வரலாற்றுப் பதிவுகளை தாங்கிய நூலை பெற்றோர்கள் புடை சூழ அரங்கத்திற்குள் நுழைந்த வரவு கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது.

தமிழாலயம் அமைந்திருக்கும் Neukölln மாவட்ட மேயர் திரு மார்ட்டின் கிக்கல் அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டதுடன், தனது சிறப்புரையில் பேர்லின் தமிழாலயத்தின் மகத்தான பணியைப் பாராட்டியதோடு , இவ்வாறான முன்மாதிரியான செயற்பாடுகள் ஒவ்வொரு இனத்தின் அடையாளத்தையும் பண்பாடுகளையும் இணைக்கும் சக்தியாக விளங்குகின்றது என்பதை சுட்டிக்காட்டினார்.எமது பேர்லின் தமிழாலயம் நடைபெற்றுவரும் இடமான Sankt Marien Oberschule அதிபரான திருமதி Nobiling அம்மையார் தனது உரையில் , பேர்லின் தமிழாலயத்தின் செயற்பாடுகளுக்கு என்றும் உறுதுணையாகக் கரம் கொடுப்பேன் என்றும் அத்தோடு எதிர்காலத்தில் எமது பாடசாலையும் தமிழாலயமும் ஒன்றிணைந்து சமூக இணைவாக்கங்களை முன்னெடுப்போம் என்று உறுதியளித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட Berliner Liedertafel அமைப்பின் தலைவர் திரு Raimund Groß அவர்கள் தனது உரையில் பேர்லின் தமிழாலயம் தமது கலை பண்பாடு விழுமியங்களை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக முன்னெடுக்கும் செயற்பாட்டை பாராட்டியதோடு தாயகத்தில் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக அவர்களால் முன்னெடுக்கப்பட்ட கல்விக்கான உதவித் திட்டத்தை பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றியதோடு இறுதியில் பேர்லின் தமிழாலயதிற்கும் சிறிய நிதியுதவியை வழங்கி வைத்தார். பெற்றோர்களின் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்ற முத்துவிழா, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற உறுதி ஏற்புடன் உணர்வுபூர்வமாக நிறைவுபெற்றது.