சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றாலும் முழு பாராளுமன்றமும் தீர்மானங்களை தெரிந்து, அதற்காக ஆதரவளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தை மதித்து செயற்பட்டார்.
ஆனால், பிரதான எதிர்க்கட்சி வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. நாணய நிதியத்தின் தீர்மானங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் அதனை ஜனாதிபதிக்கு அனுமதித்துக்கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்று உதவி பெற்றிருக்கிறோம். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவித்து அனுமதி பெறப்படவில்லை.
என்றாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தை மதித்து, நாணய நிதியத்தின் தீர்மானங்களை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அனைவரும் நாணய நிதியத்தின் உதவியுடன் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு செயற்பட்டார்.
அத்துடன், பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என தாங்களே ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்ததாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும், தெரிவித்து வந்தது.
தற்போது நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் அதற்கு ஆதரவளிக்காமல் பாராளுமன்றத்தில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அவர்கள் ஒளிந்துகொண்டனர். அரசியல் பொறாமையே இதற்கு காரணமாகும்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அரசாங்கத்துக்கு கிடைக்காது என்றே இவர்கள் நம்பி இருந்தனர். அதனாலே நாணய நிதியத்துக்கு செல்லுமாறு தெரிவித்து வந்தனர். தற்போது நாணய நிதியத்தின் உதவி கிடைத்த பின்னர், மக்களின் பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
மக்களுக்கு நெருக்கடி இருக்கும் வரைக்குமே இவர்களுக்கு மக்கள் முன் செல்லமுடியும். அரசியல் செய்ய முடியும். அதனால் இவர்களின் திட்டங்கள் தற்போது படிப்படியாக தோல்வியடைந்து வருகின்றன. இதன் காரணமாக மக்களும் இவர்களில் இருந்து விலகி, ஜனாதிபதி மீது நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தி இடம்பெற இருக்கும் மே தின கூட்டத்தையும் வழமையாக அதிக மக்கள் கலந்துகொள்ள முடியுமான இடத்தில் நடத்தாமல், கொழுபில் ஏ.ஈ.குணசிங்க என்ற சிறிய மைதானத்தில் நடத்த தீர்மானித்திருக்கிறது.
அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியின் செல்வாக்கும் குறைந்து வருகிறது. அதனால் அவர்களும் சிறியதொரு இடத்திலேயே மே தின கூட்டத்தை நடத்த இருக்கின்றனர். இவ்வாறு 2024இல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்போது இந்த கட்சிகள் அனைத்தும் பலவீனமடைந்து செல்லும் என்றார்.