2048 இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக “வெற்றி பெறுவோம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் திங்கட்கிழமை (01) காலை 10மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேனையுடன் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தனவின் தலைமையில் இடம்பெற்ற மேதின கூட்டம், வாகன பேரணி, கண்காட்சிகள் என கட்சிகளின் பலத்தை காட்டும் சம்பிரதாய மேதின நிகழ்வுகளில் இருந்து விலகி, மிகவும் எளிமையாகவே இடம்பெற்றது.
மேதின கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தும் நோக்கில் சுகததாச உள்ளக அரங்கு டிஜிடல் தொழிநுட்பத்தினால் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கலந்துகொள்ள நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் கட்சி ஆதரவாளர்கள் அதிகாலை முதல் மண்டபத்தை வந்ததடைந்த வண்ணம் இருந்தனர்.
காலை 9மணியாகும்போது சுகததாச உள்ளக அரங்கு ஆதரவாளர்களால் நிரம்பி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
காலை 9.30 மணியாகும்போது ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, தவிசாளர் வஜிர அபேவர்த்தன, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் மண்டபத்துக்கு வந்து முன்வரிசையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் கட்சியின் ஏனைய முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, விஜயகலா மஹேஷ்வரன், ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க,ஆர்.யோகராஜ், தயாகமகே, அனோமா கமகே, ஆசுமாரசிங்க, சமன் ரத்னப்பிரய, பாலித்த தெவரப்பெரும என ஆகியோரும் உள்ளராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகளின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் 68 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மண்டபத்துக்கு வருகை தரும்பாேது அவர்களை மாலை அணித்து வரவேற்றபோது ஆதரவாளர்கள் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து ஜயவேவா கோஷம் எழுப்பி உட்சாகப்படுத்திக்கொண்டிருந்தனர். அனைவரும் மண்டபத்துக்கு வந்து அமந்த பினனர் காலை 10மணிக்கு தேசிய கீதத்துடன் மேதின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார வரவேற்புரையுடன் தனது உரையை முன்னெடுத்தார். அதனைத்தொடர்ந்து உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ, வஜிர அபேவர்த்தன, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன, ரவி கருணாநாயக்க ஆகியாேர் உரையாற்றியதுடன் இடைக்கிடையே கலை ,கலாசார ஆடல் மற்றும் பாடல்களும் இடம்பெற்றன.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டத்துக்கு வந்து உரையாற்றுவார்கள் என்றே அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். என்றாலும் அவர் நிகழ் நிலை (இணையவழி) ஊடாக உரையாற்றினார். ஜனாதிபதி உரையாற்ற ஆரம்பித்த போது ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை கரகோஷம் மற்றும் ஜயவேவா கோஷத்தினால் பெரும் சத்தத்துடன் வெளிப்படுத்தி வந்தார்கள்.
ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து இறுதியாக கலை நிகழ்ச்சியுடன் கூட்டம் பிற்பகல் 12 45 மணியளவில் நிறைவுக்கு வந்தது. கூட்டம் நிறைவடைந்த பின்னர், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை நீண்ட காலத்துக்கு பின்னர் சந்திக்க கிடைத்த மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதையும் செல்பி எடுத்துக்கொள்வதையும் காணக்கூடியதாக இருந்து.