பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதி மயங்கிய நிலையில், 13 வயது சிறுவனொருவன் பஸ்ஸை பாதுகாப்பாக நிறுத்திமைக்காக பாராட்டப்பட்டுள்ளான்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை (26) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாரென் நகரிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து சுமார் 70 மாணவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. பஸ்ஸை செலுத்திக் கொண்டிருந்த நிலையில் சாரதி உணர்விழந்தார்.
அப்போது, டிலோன் றீவ்ஸ் எனும் மாணவன் சாரதி ஆசனத்தை நோக்கி ஓடிவந்து, சுக்கானை சரியாகப் பிடித்து பஸ்ஸை கட்டுப்படுத்தியதுடன், ஹேண்ட் பிறேக்கை இயக்கி வீதியின் மத்தியில் பஸ்ஸை நிறுத்தினான் என உள்ளூர் கல்வி வலய அத்தியட்சகர் ரொபர்ட் லிவர்னோய்ஸ் தெரிவித்துள்ளார்.
5 வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த டிலோன் றீவ்ஸ், நிலைமையை உணர்ந்து சாரதி ஆசனத்தை நோக்கி ஓடிவந்தான்.
சக மாணவர்கள் வீறிட்டுக் கொண்டிருந்த நிலையில். அவன் தனது காலை பிறேக் மீது வைத்ததுடன், பின்னர் ஹேண்ட் பிறேக்கை இயக்கி பஸ்ஸை நிறுத்தினான்.
இதன்போது கண்காணிப்புக் கெமராவில் பதிவாகியிருந்த வீடியோவையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
டிலோன் றீவ்ஸை பலர் பாராட்டியுள்ளனர். ‘7 ஆம் வகுப்பு ஹீரோ டிலோன் றீவ்ஸ் குறித்து வரென் நகரம் பெருமையடைகிறது’ என வரென் நகர சபை உறுப்பினர் ஜொனதன் டபேர்ட்டி தெரிவித்துள்ளார். பஸ்ஸை நிறுத்தியதன் மூலம் விபத்து ஒன்றை அவன் தடுத்துள்ளான் எனவும் அவர் கூறியுள்ளார்