30 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வங்குரோத்தடைந்த நாடாகியுள்ளது

91 0

 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் உள்நாட்டு யுத்த நிலைமையின் போதும் இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 30 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வங்குரோத்தடைந்த நாடாகியுள்ளது. இந்நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 30 ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை கொழும்பு – புதுக்கடையிலுள்ள அவரது உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எம்மால் வழங்கப்படக் கூடிய கௌரவமாகும். அடுத்த ஆண்டு ஜூன் 23ஆம் திகதி அவரது நூறாவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.

இன்று எமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கவில்லை.

உள்நாட்டு யுத்தம் நிலவிய சந்தர்ப்பத்திலும் தொழிற்சாலை துறைக்கான கொள்கை அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் யுத்தத்துக்கு மத்தியிலும் நாடு அபிவிருத்தியடைந்தது.

ஆனால் 30 ஆண்டுகளின் பின்னர் இன்று நாடு வங்குரோத்தடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிருடனிருந்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்நிலைமையிலிந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.