அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு இலங்கை தயாராகிவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் இதுபோன்றதொரு இரகசிய உடன்பாடு 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்டதாகவும் அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது அமைச்சரவைக்கோ, நாட்டுக்கோ தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்காக, அதுபோன்றதொரு நகர்வு, தற்போது முன்னெடுக்கப்படுவதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான இந்தப் பாதுகாப்பு உடன்பாட்டினால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவோ, பாதுகாப்பு ரீதியாகவோ நன்மை கிடைக்காது எனவும் ஆனால், நாட்டின் சுதந்திரத்துக்கும், சுயாட்சிக்கும் பேரிடியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்தது போல, இந்த அரசாங்கமும் இரகசியமாக இந்த உடன்பாட்டில் கையெழுத்திட முனைந்தால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்களை நடத்த நேரிடும் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
போர்ச்சூழலில், விமானங்கள், கப்பல்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்கும் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது. அப்போது இந்த உடன்பாட்டில் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்கா சார்பில் றொபேர்ட் ஓ பிளேக்கும் கையெழுத்திட்டிருந்தனர்.
எனினும், இந்த உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து மகிந்த அரசாங்கம் பொதுமக்களுக்கு எந்த தகவலையும் வெளியிடவில்லை என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.