பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நபர்களின் குடும்பத்தினர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில், என் குடும்பத்தில் மட்டும் 5 பேருக்கு சுயநினைவு இல்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினோம்.எங்கள் ஊர் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். அதிக வீடுகள் உள்ள குறுகலான பகுதி இது. அதனால் மக்களை கூட்டம் கூட்டமாக வெளியேற்றிவிட்டனர்.
இது கொடுமையான விஷ வாயு கசிவு… குறைந்தது 9 பேர் இறந்துள்ளனர். மூன்று உடல்கள் நீல நிறமாக மாறிவிட்டன… இது முழுக்க முழுக்க விஷம். உங்களால் மூச்சுகூட விட முடியாது..கண்களை சிவப்பாக மாற்றும் இது, என்று கூறி உள்ளனர்.
பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மன் , “லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. காவல்துறை, அரசு மற்றும் NDRF குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் இது தொடர்பான முழு விவரங்கள் வெளியிடப்படும்” என்று அவர் பஞ்சாபியில் ட்வீட் செய்துள்ளார்.
சம்பவ விவரம்:
சம்பவ இடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அங்கே தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
வாயு கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டு உள்ளது. என்ன மாதிரியான வாயு என்று விவரம் வெளியிடப்படவில்லை.
சிறிய தொழிற்சாலை ஒன்றில் மூடிய அறையில் இந்த வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் உள்ளே இருந்தவர்கள் சுயநினைவை இழந்து, அதன்பின் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நிச்சயமாக, இது ஒரு வாயு கசிவு சம்பவம்தான். NDRF குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை வெளியேற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மற்றும் 11 பேர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர் என்று லூதியானா வெஸ்ட் எஸ்டிஎம் சுவாதி தெரிவித்து இருக்கிறார்..