7 லட்சம் நுகர்வோருக்கு சமையல் எரிவாயு மானியம் ரத்து

381 0

201607200733460795_LPG-subsidy-cut-off-to-7-lakh-consumers_SECVPFமத்திய அரசு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இம்மாதம் 1-ந் தேதி மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தியது. அத்துடன், 2016 ஜூலை முதல் 2017 ஏப்ரல் வரையிலான 10 மாதங்களுக்கு மண்எண்ணெய் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
2010 ஜூன் மாதத்தில் பெட்ரோல் விலை நிர்ணயத்தில் அரசுக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. பிறகு டீசல் விலையும் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இறுதியில், 2014 அக்டோபர் மாதத்தில் டீசல் விலையில் அரசுக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கின. எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. நடப்பு நிதி ஆண்டு இறுதியில் மண்எண்ணெய் விலையும் ஏறக்குறைய சந்தை விலைக்கு நிகராக வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமையல் எரிவாயு மானியத்தையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேரடி மானிய திட்டத்தால் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை 3.25 கோடி போலி மற்றும் செயல்படாத எரிவாயு இணைப்புகளை அகற்றி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஒரு சிலிண்டர் எரிவாயு விலை ரூ.2 உயர்த்தப்பட்டது.

அதுபோல், வரி விதிப்பிற்கு இலக்காகக் கூடிய வகையில் ஒருவருக்கு (அல்லது அவரது வாழ்க்கை துணைவருக்கு) ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அவர் சமையல் எரிவாயுவை சந்தை விலைக்குத்தான் வாங்க வேண்டும். நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வசதி படைத்த நுகர்வோர் தானாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை சரண்டர் செய்யும் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் மானியத்தை உதறி உள்ளனர். எனினும் ஓராண்டுக்குப் பின் மீண்டும் மானிய சலுகையை பெற வகை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் மத்திய அரசின் எரிவாயு மானிய சுமை, கடந்த நிதி ஆண்டில் (2015-16) ரூ.27,571 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் அது ரூ.76,285 கோடியாக இருந்தது.