சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் திங்கட்கிழமை (மே1) கொண்டாடப்படவுள்ளது. கடந்த 2020 , 2021ஆம் ஆண்டுகளில் கொவிட் தொற்று , 2022இல் பொருளாதார நெருக்கடிகளால் மேலெழுந்த ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றால் மே தினக் கூட்டங்கள் சம்பிரதாய பூர்வமாக நடத்தப்படவில்லை. எனினும் இம்முறை இந்த நெருக்கடிகளிலிருந்து நாடு ஓரளவிற்கு மீண்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான கட்சிகள் அவற்றின் மே தினக் கூட்டங்களை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சி இம்முறை அதன் மே தினக் கூட்டத்தை கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் , பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
எவ்வாறிருப்பினும் இக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தான் முழு நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கசார்பற்ற அரச தலைவர் என்பதால் கட்சி சார் நிகழ்வான மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் கொழும்பு , பொரளையில் அமைந்துள்ள கெம்பல் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
‘சவால்களை தோற்கடித்து இலட்சியங்களை வெற்றி கொள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ‘வேலைத்தளத்தில் ஆரம்பிக்கும் தாய் நாட்டின் போராட்டம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு ஏ.ஈ.குணசிங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மாளிகாவத்தை – பீ.டி.சிறிசேன மைதானத்துக்கு அருகில் மதியம் 1 மணிக்கு பேரணி ஆரம்பமாகவுள்ளது.
2 மணியளவில் பேரணி ஏ.ஈ.குணசிங்க மைதானத்தை சென்றடைந்ததன் பின்னர் கூட்டம் ஆரம்பமாகும். ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மலையக மக்கள் முன்னணி , அகில இலங்கை முஸ்லிம் காங்ரஸ் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் உள்ளிட்டவையும் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு , அகில தமிழ் காங்ரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை கண்டியில் இடம்பெறவுள்ளது. ‘ஒன்றிணைவோம் வலு பெறுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் கண்டி பொது சந்தை வளாகத்தில் மதியம் 1 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
அமைச்சுப்பதவிகளை ஏற்றுள்ள சு.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா , மஹிந்த அமரவீர , ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)
‘நாட்டை விற்கும் , மக்களை துன்புறுத்தும் , ஊழல் மிக்க ஆட்சியைத் தோற்கடிப்போம். மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஜே.வி.பி.யின் மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கும் நகரசபைக்குமிடையில் உள்ள பகுதியில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு பீ.ஆர்.சீ. மைதானத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி விகாரமாதேவி பூங்காவிற்கருகிலுள்ள பகுதியைச் சென்றடையும். அதனையடுத்து ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கூட்டம் ஆரம்பமாகும்.
இலங்கை தொழிலாளர் காங்ரஸ்
மலையகத்தில் பிரம்மாண்ட மே தினக் கூட்டங்களை நடத்தியுள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸ் இம்முறை எளிமையான முறையில் தோட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளது. அதற்கமைய தொழிலாளர் காங்ரஸ் தொழிற்சங்கத்தின் தலைவர்களின் தலைமையில் இக்கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. பிரம்மாண்ட கூட்டங்களுக்காக செலவிடும் பணத்தை பாடசாலை மாணவர்களின் கல்விக்காக செலவிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
சுதந்திர மக்கள் கூட்டணி
அரசாங்கத்திலிருந்து விலகிய 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ள சுதந்திர மக்கள் கூட்டணியின் கண்னி மே தினக் கூட்டம் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டி நகரசபைக்கருகில் மதியம் ஒரு மணியளவில் பேரணி ஆரம்பமாகி , சஹஸ் உயண கட்டடத்தை சென்றடையும். அதனையடுத்து பிற்பகல் 2 மணியளவில் மே தினக் கூட்டம் ஆரம்பமாகும்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப் பெரும, சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித ஹேரத் , கலாநிதி நாலக கொடஹேவா உள்ளிட்ட 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ள இக் கூட்டம் ‘சுதந்திர நாட்டில் மே தினம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
உத்தர லங்கா சபாகய
அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற பிரிதொரு குழுவினரான பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உத்தர லங்கா சபாகயவின்’ மே தினக் கூட்டம் கொழும்பு – ஹைட்பார் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
‘நாட்டை விற்கும் மேற்குலம் சார் ஆட்சிக்கு எதிரான மே தினம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் மாலை 3 மணிக்கு உத்தர லங்கா சபாகயவின் மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.