நாட்டின் பல பகுதிகளிலும் திங்கட்கிழமை (மே1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டங்களை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தினால் கொழும்பு , கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெருமளவான கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளமையால் அங்கு 3500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கொழும்பு நகர் , நுகேகொட , கண்டி , நுவரெலியா மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. குறித்த பிரதேசங்களில் வாகன போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தினால் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெறவுள்ள மே தினக் கூட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சுகததாச உள்ளக அரங்கு , பொரளை கெம்பல் பார்க், பஞ்சிகாவத்தை சங்கராஜா மாவத்தை சந்தி , ஈ.ஏ.குணசிங்கபுர மைதானம் , ஹெவ்லொக் வீதி – பம்பலப்பிட்டி பி.ஆர்.சி. விளையாட்டு மைதானம் , எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை, செஞ்சிலுவை சந்தி , ஹைட் பார்க் , கோட்டை புகையிரத நிலையம் , பி.டி. சிறிசேன மைதானம் , நுகேகொடையில் தெல்கந்த சந்தி , நுகேகொட ஆனந்த சமகோன் அரங்கு உள்ளி பகுதிகளில் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போக்குவரத்துக்கு பாதிப்பின்றி பேரணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய வீதிகளின் ஒரு பகுதியில் மாத்திரமே பேரணிகள் இடம்பெறும். அதே போன்று பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்த நேரத்தில் கூட்டங்களை ஆரம்பித்து உரிய நேரத்தில் அவற்றை நிறைவு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.