மனைவி கோமாவில் இருப்பதால்,கணவனின் உடலை தகனம் செய்வதில் சிக்கல்

384 0

201607200548240553_With-wife-in-coma-Indian-man-who-died-in-accident-likely-to_SECVPFஅமெரிக்காவில் கார் விபத்தில் பலியான இந்திய மென்பொருள் பொறியியலாளர்  மனைவி கோமாவில் இருப்பதால், என்ஜினீயரின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய இந்திய தூதரகம் முடிவு செய்துள்ளது.
மராட்டிய மாநிலம் கல்யாணைச் சேர்ந்தவர் கமல்நாயன் கவாய் (வயது 74). அவருடைய மனைவி அர்ச்சனா (60). இவர்களுடைய மகன் சான்டன் (38). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி மனிஷா சுர்வடே (32). இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

சான்டன், அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். அவருடன் பெற்றோரும் வசித்து வந்தனர். கடந்த 4-ந்தேதி, நியூயார்க் நகரில் வாண வேடிக்கைகளை பார்த்து விட்டு, சான்டன் தன் குடும்பத்துடன் ஒரே காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு லாரி, அவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில், இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

இந்த விபத்தில், சான்டனும், அவருடைய பெற்றோரும் பலியானார்கள். மனைவியும், குழந்தையும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். லாரி சாரதியும்  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவி மனிஷாவுக்கு தலைக்காயம் ஏற்பட்டதால், அவர் ‘கோமா’ நிலையை அடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்க சட்டப்படி, ஒருவரது உடலை தகனம் செய்ய வேண்டுமானால், அவருடைய வாழ்க்கைத்துணையின் ஒப்புதல் வேண்டும். ஆனால், சான்டனின் மனைவி ‘கோமா’வில் இருப்பதால், அவரது ஒப்புதலை பெற முடியாத நிலை உள்ளது.ஆகவே, அவர் கோமாவில் இருந்து திரும்பும்வரை, சான்டனின் உடலை அடக்கம் செய்து விடலாம் என்று நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத்தூதர் ரிவா கங்குலி யோசனை தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், சான்டனின் பெற்றோர் இருவருமே இறந்து விட்டதால், ஒப்புதல் தொடர்பான சிக்கல் எதுவுமின்றி, அவர்கள் இருவரின் உடல்களும் அமெரிக்காவிலேயே தகனம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-சான்டனின் மனைவி ‘கோமா’வில் இருந்து திரும்பும்வரை சான்டனின் உடலை அடக்கம் செய்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்து விட்டால், சான்டன் உடலும் தகனம் செய்யப்படும். பலியான குடும்ப உறுப்பினர்கள் 3 பேருக்கும் மரண சான்றிதழ் வழங்கப்படும். அவர்களது குடும்பத்துக்கு காப்பீட்டு பணம் கிடைப்பதற்கு உதவி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.