மன்னாரில் திடீர் சுகயீனமடைந்த பாடசாலை அதிபர் வைத்தியசாலையில் அனுமதி

128 0

மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (25) விஜயம் செய்த வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த அதிபருக்கு திடீரென உடல் ரீதியாக உபாதை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் மூன்று பேர் நேற்றைய தினம்(25)செவ்வாய்க்கிழமை மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்கு சென்ற குறித்த மூன்று அதிகாரிகளும் இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய உள்ளதாக தெரிவித்த நிலையில் தரம் 11 வகுப்பறைக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த வகுப்பறையில் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை வெளியேற்றியுள்ளனர். பின் அங்கு சென்ற குறித்த அதிபரையும்,அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

இதனால் அதிபருக்கும்,குறித்த அதிகாரிகள் மூவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது என தெரிய வருகிறது.

பின்னர் அதிபர் அங்கிருந்து சென்று அதிபர் அலுவலகத்தில் தனது கடமைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது குறித்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் அதிபர் அலுவலகத்திற்குச் சென்று பல்வேறு ஆவணங்களை கோரி அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் அதிபர் உள ரீதியாக பாதிப்படைந்துள்ளார்.

உடனடியாக தனக்கு உடல் ரீதியாக உபாதை ஏற்படுவதை அறிந்து கொண்ட அதிபர் பாடசாலை லொக்கு புத்தகத்தில் பதில் அதிபருக்கு கடமையை தற்காலிக பொறுப்பு கொடுத்து எழுதி விட்டு பாடசாலைக்கு வெளியில் வந்து முச்சக்கர வண்டி ஒன்றை பிடித்து மன்னார்  வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் குறித்த அதிபர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பாடசாலைக்குச் சென்ற மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் மூவரில் ஒருவரின் மனைவியை குறித்த பாடசாலைக்கு அதிபராக நியமனம் செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும், அதன் காரணமாகவே தொடர்ச்சியாக குறித்த அதிபருக்கு மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளினால் தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

இவ் விடயம் குறித்து மாகாண ரீதியில் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.