யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் அருகில் இரத்த வங்கி அல்லது இரத்த தான முகாம்களை அமைத்து, இரத்த தானம் செய்வதற்கும், குருதி சேகரிப்பில் ஈடுபடவும் முன்வருமாறு கோரப்பட்டுள்ளது.
குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கியினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இது குறித்து தகவல்களை பெறவும், அறிவிக்கவும் 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இருக்கவேண்டிய குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால், தற்போது 181 பைந்த் குருதியே காணப்படுகிறது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.
இரத்த வங்கி தொடர்ச்சியாக இயங்கி, இரத்த தான முகாம்களை நடத்தி குருதியை சேகரித்து வருகின்றபோதும், குருதி விநியோகமானது தினமும் அதிகரித்தே செல்கிறது.
அத்துடன், குருதி சேகரிப்பை விட குருதி விநியோகம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் கையிருப்பில் உள்ள குருதியின் அளவு குறைந்து காணப்படுவதோடு, நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இக்குருதி தட்டுப்பாடு தொடர்பாக முகநூல் மற்றும் ஏனைய ஊடகங்களின் வாயிலாகவும், தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்திருந்த போதும், போதுமான குருதி கிடைக்காமல், தொடர்ந்து குருதித் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.