சட்டவிரோத விளம்பரங்களை அகற்றும் செலவுகளை அரசியல் கட்சிகளிடம்

417 0

201607200526305138_cost-must-be-recovered-from-the-political-parties-to-remove_SECVPFஇயற்கை வளங்களில், சாலைகள் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள், மேம்பாலங்களில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களை அகற்றுவதற்கு ஏற்படும் செலவினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2006-ம் ஆண்டு வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ‘வனப்பகுதியில் உள்ள பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரமாக உள்ள மரங்கள், மேம்பாலங்கள், சாலைகள் நடுவே உள்ள தடுப்புகள் ஆகியவற்றில் மீதும் அரசியல் கட்சிகள், மத ரீதியான அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. இதற்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாறைகள், மரங்கள், பொதுஇடங்கள், நடைபாதைகள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரங்கள் செய்வதை தடுக்கவும், விளம்பரங்கள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் 5 அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட குழுவை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைத்துள்ளதாகவும், மாவட்ட அளவில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுக்களை சேர்ந்த அதிகாரிகள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் சட்டவிரோதமாக செய்யப்படும் விளம்பரங்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோதமாக பொது இடங்களில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அந்த உத்தரவை அரசு அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று கூறி டிராபிக் ராமசாமி தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர்கள் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்கள், சட்டவிரோதமான விளம்பரங்களை அகற்ற தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதனால், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதை பார்க்க இந்த வழக்கு விசாரணையை அப்போது தள்ளிவைத்தோம்.

இன்று வழக்குகளை விசாரணைக்கு எடுத்தபோது, பாறைகள் உள்ளிட்ட இடங்களில் செய்யப்பட்டிருந்த விளம்பரங்களை அகற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கைகள், புகைப்படங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதேநேரம், பாறை போன்ற இயற்கை வளங்களில் முன்பை விட அதிகமாக, புதிதாக, வெளிப்படையாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதற்கான புகைப்படங்களை  மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை அரசு தரப்புக்கு, மனுதாரர் வழங்கவேண்டும்.

இந்த புகைப்படங்கள் மூலம், இயற்கை வளங்கள், மேம்பாலங்கள் மற்றும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர்களில் மீண்டும் விளம்பரங்கள் செய்யப்படுவது தெளிவாகிறது. வர்த்தக ரீதியான விளம்பரங்களுக்கு இணையாக அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் இயற்கை வளங்கள், பொது இடங்களில் புதிதாக வரையப்பட்டுள்ளன.

எனவே, இதுபோன்ற விளம்பரங்களை அரசு அழிப்பதுடன், அந்த நடவடிக்கைகளுக்கு செலவாகும் தொகையை, விதிகளை மீறி விளம்பரம் செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

இதுமட்டுமல்லாமல், விளம்பரம் செய்தவர்கள் மீது குற்ற வழக்குகளையும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுநாள் வரை சட்டவிரோத விளம்பரங்களை செய்ததாக 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். இந்த வழக்குகளின் விவரங்களை இந்த ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரும்பட்சத்தில், அதன் அடிப்படையில், அந்த வழக்குகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘சட்டவிரோதமாக இயற்கை வளங்களில், பொது இடங்களில் செய்யப்படும் அரசியல் ரீதியான விளம்பரங்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பொறுப்பு ஏற்கவேண்டும்’ என்று மனுதாரர்கள் தரப்பில் யோசனை கூறப்பட்டது.

இதை நாங்கள் ஏற்கிறோம். சட்டவிரோதமாக செய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே அகற்றவேண்டும் என்றும் அரசு தரப்பில் அந்த விளம்பரங்கள் அகற்றினால், அதற்கான செலவினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் ஏற்கவேண்டும் என்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும், தமிழக அரசு 15 நாட்களுக்குள் நோட்டீசு அனுப்பவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் நோட்டீசுக்கு, பதிலளிக்க அரசியல் கட்சிகளுக்கு ஒரு மாதம் காலஅவகாசம் வழங்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத விளம்பரங்களை செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறவேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். மேலும், சட்டவிரோதமாக இயற்கை வளங்கள் மீது விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெறவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்துள்ளதாகவும், அதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும், மனுதாரர் யானை ராஜேந்திரன் கூறினார். அவ்வாறு வழக்கு தொடரும்பட்சத்தில், அந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.