கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே எடுக்குமெனவும், அதில் அரசாங்கம் தலையிடாது எனவும் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
மோதல் சம்பவத்தையடுத்து விசாரணை செய்வதற்காக சிறீலங்கா அரசாங்கத்தின் 3 அமைச்சர்கள் குழு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் வருகைதந்ததுடன், துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நிர்வாகத்தினர், மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே, ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,இது ஒரு பயனுள்ள சந்திப்பாக இருந்தது. இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது என அனைவரும் ஏற்றுக்கொண்டனர். யாழ். பல்கலைக்கழகம் முழுமையாக மூடப்படவில்லை. இன்று புதன்கிழமையிலிருந்து பல்கலைக்கழகம் மீள ஆரம்பிக்கும்.
மேலும், பல்கலைக்கழகம் வழமையான நிலையிலேயே உள்ளதாகவும், அதனை மீளத் திறக்கவேண்டுமென மாணவர்களும் சிங்கள மாணவிகளும் தெரிவித்துள்ளனர்.தாம் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருப்பதாகவும், தொடர்ந்தும் தங்கியிருப்போம் எனவும் தெரிவித்தனர்.மோதல் சம்பவம் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது. அதனைப் பல்கலைக்கழக நிர்வாகமே கவனித்துக்கொள்ளும்.