போலி யாப்பினை முன்னிலைப்படுத்தி பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளர் தெரிவு

83 0

போலி யாப்பினை முன்னிலைப்படுத்தி பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கு அடிபணிவதற்காக பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை யாப்புக்கு முரணாக செயற்படுகிறது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபை உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்கு அடிபணியும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டம் கட்சி யாப்புக்கு முரணானது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உண்மையான யாப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்சபை கூட்டத்தின் கட்டமைப்பு தொடர்பில் கட்சி யாப்பில் குறிப்பிடப்படவில்லை.

இல்லாத விடயங்களை முன்னிலைப்படுத்தி கூட்டத்தை நடத்தி, எவ்வாறு தீர்மானங்களை எடுக்க முடியும்?

போலி யாப்பினை முன்னிலைப்படுத்தியே பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பொதுச் சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிச்சயம் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அடிப்படை கொள்கையை புறக்கணித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு அடிபணியும் வகையில் செயற்படுகிறது. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கிய மக்கள் அரசியல் ரீதியில் செய்த தவறை திருத்திக்கொள்ள தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள் என்றார்.