வடக்கு, கிழக்கில் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு மன்னார் மாவட்ட தமிழ் கட்சிகளும் ஆதரவு

79 0

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு  தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ),ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 11 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டானியல் வசந், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கமானது எமது மக்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி  ஏற்கனவே அடக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கின்ற எமது மக்களை  மீண்டும் மீண்டும் அடக்கி ஆழ் வதற்கான  ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகின்றது.

இதற்கு எதிராக நாங்கள் அனைவரும்  கிளர்ந்து எழுந்து இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து துடைத்து எடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள  வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில்  சிறிய கருத்தை பதிவிட்டாலே அவர்களை கைது செய்து சிறை படுத்துவதற்கான அதிகாரம் இந்த ஆயுதப் படைகளுக்கு வழங்கப்படுகின்றது. .

ஏற்கனவே இந்த ஆயுதப் படைகளுக்கு இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் அதே போன்று அவசர கால தடைச் சட்டம் ஊடாக பல அடக்குமுறை அதிகாரங்கள் வழங்கி இருக்கிறது.

உதாரணத்திற்கு எமது கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான அதிகாரம் எமது நிலங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம் மற்றும் கேள்வி கணக்கின்றி எமது இளைஞர்கள் யுவதிகளை சிறை படுத்துவதற்கான அதிகாரம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரம் என்று பல அதிகாரங்களை  வழங்கி இந்த நாடு எமது மக்களை அடக்கி ஆள்கிறது.

மீண்டும் மீண்டும் எமது மக்களை ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் வைப்பதற்கான புதிய சட்டத்தை  நாட்டிலே இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.

அது தான்சட்டம் எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும்  ஒன்றாக இணைந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இந்த நாட்டில் கொண்டு வராத வகையில் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த விடயத்தில்  முஸ்லிம் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்பதுடன்  எதிர் வரும் 25ஆம் தேதி   வடக்கு கிழக்கு தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அன்றைய தருணம் வர்த்தக நிலையங்களை மூடி அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் முச்சக்கர வண்டிகள்  அரச தனியார் பேருந்துகள் இயங்காமல்  நிறுத்தி போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதோடு இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள்,  மனித நேயச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு  அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பை காட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.