எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவே தேசிய அரசாங்கம் – நாலக கொடஹேவா

80 0

அரசாங்கத்திடம் சாதாரண பெரும்பான்மை உள்ளது. ஆகவே, தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டிய தேவை கிடையாது. எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவே தேசிய அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்க பொதுஜன பெரமுனவின் பொதுச் சபை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் யாப்புக்கு அமைய பொதுச் சபை கூட்டம் இடம்பெறவில்லை. எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.

பொதுஜன பெரமுன என்பது கட்சி அல்ல அது ஒரு குடும்ப நிர்வாகம் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமானால், தேசிய அரசாங்கத்தில் சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பு உறுப்பினர்களில் ஒரு சிலர் குறிப்பிடுகிறார்கள்.

யாருடைய தேவைக்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகிறது என்ற கேள்வி எம் மத்தியில் காணப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்று அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஏனெனில், அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை உள்ளது. தேசிய அரசாங்கம் என்று குறிப்பிட்டுக்கொண்டு எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றன.

சுதந்திர மக்கள் சபை அல்லது சுதந்திர மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் தேசிய அரசாங்கத்தில் இணையப் போவதில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தேசிய அரசாங்கத்தில் இணைய வேண்டிய தேவை உள்ளது. ஆகவே, சுதந்திர கட்சியினர் ஒருவேளை தேசிய அரசாங்கத்தில் ஒன்றிணையலாம் என்றார்.