மன்னிப்பு, நஷ்ட ஈடு என்ற பேச்சுக்கே இடமில்லை

85 0

திமுகவினரின் சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு, நஷ்ட ஈடு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய நோட்டீஸூக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்.14 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, பொன்முடி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உட்பட திமுகவினர் பலரது சொத்துப் பட்டியல் தொடர்பாக ஆவணங்களை வெளியிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல், உதயநிதி ஸ்டாலின் சார்பில், அண்ணாமலை 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இழப்பீடாக ரூ.50 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. டி.ஆர்.பாலு தரப்பிலும் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அண்ணாமலை தரப்பில் ஏற்கெனவே ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸூக்கு, அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ் அனுப்பியுள்ள பதில் நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

திமுகவினரின் ஊழலை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழி்ப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சொத்துப்பட்டியலை வெளியி்ட்டுள்ளேன். உதயநிதி ஸ்டாலின் தனது குடும்ப, அரசியல் அதிகாரத்தை தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். தற்போது அந்தநிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டாலும் அந்த நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பின்புலமாக இருப்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஊழலை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த எனக்கு முழு உரிமை உள்ளது. திமுகவினரின் மிரட்டலுக்கு நான் அடிபணிய மாட்டேன்.நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் இந்த விஷயத்தில் மன்னிப்பும் கோர முடியாது. நஷ்ட ஈடும் வழங்க முடியாது. அந்தபேச்சுக்கே இடமில்லை. உதயநிதியும், அவரது குடும்பத்தினரும் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ள சொத்துகளை தமிழக மக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்