சொந்த நாட்டில் ஊழல், பணச்சலவை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஹான்ட்ரோ டொலேடோ, அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார். அவர் விரைவில் நாடு கடத்தப்படவுள்ளார்.
2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை பெருவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அலெஹான்ட்ரோ டொலேடோ (77). ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரேஸிலின் கட்டுமான நிறுவனமொன்றிடமிருந்து 20 மில்லியன் டொலர்களை லஞ்சமாக அவர் பெற்றார் என டொலேடோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பெரு அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வரும் டொலேடோ, பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
பெரு அரசின் கோரிக்கையின் பேரில் 2019 ஆம் அண்டு அமெரிக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கவும், அவரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு காலில் இலத்திரனியல் கண்காணிப்பு சாதனம் பொருத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரை நாடு கடத்துவதற்கு எதிரான மனுவை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. அதையடுத்து நேற்றுமுன்தினம் அமெரிக்க சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடம் அலெஹான்ட்ரோ டொலேடோ சரணடைந்தார். சில தினங்களுக்குள் அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.