சூடானில் மோதல்கள் தொடரும் நிலையில், அங்குள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் அந்நாடுகளின் மக்களும் வெளியேற உதவுவதற்கு சூடானின் இராணுவத் தளபதி இணங்கியுள்ளார் என சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகர் கார்ட்டூமில், சூடான் இராணுவத்துக்கும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் கடந்த 15ஆம் திகதி முதல் மோதல்கள் நடைபெறுகின்றன.
சூடானை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் ஆர்.எஸ்.எவ். எனும் துணை இராணுவப் படையின் தளபதி ஜெனரல் மொஹம்மத் ஹம்தான் தகலோவுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக இம்மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், 400 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3351 பேர் காயமடைந்துள்ளனர் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சூடானிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அத்திட்டங்கள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், பிரித்தானிய, அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் சீனப் பிரஜைகளும் இராஜதந்திரிகளும் இராணுவு விமானங்கள் மூலம் கார்ட்டூமிலிருந்து வெளியேற்றப்படுவர் என சூடான் இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
தனது பிரஜைகளையும் நட்பு நாடுகளின் பிரஜைகளையும் வெளியேற்றுவதற்கு தான் ஏற்பாடு செய்வதாக சவூதி அரேபியாவும் அறிவித்துள்ளது. சவூதி அரேபிய தூதரக ஊழியர்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு விட்டனர் என சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.
சூடானிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காக, சூடானுக்கு அருகிலுள்ள தளங்களுக்கு அமெரிக்கப் படைகளை நகர்த்த, ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் ஜோன் கேர்பி கூறியிருந்தார்.
அது எந்த இடம் என அவர் கூறவில்லை. எனினும், கார்ட்ரூமிலிருந்து 1,126 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஜிபூட்டி நாட்டிலுள்ள அமெரிக்கப் படைத்தளத்திலிருந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது.