33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (வடமாநிலம்) கொற்றிங்கன்.

1864 0

தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தின் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடி வருகிறது. சென்ற வாரம் மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான அகவை நிறைவு விழா நிறைபெற்றதைத் தொடர்ந்து, வடமாநிலத்துக்கான விழா 22.04.2023 சனிக்கிழமை கொற்றிங்கன் நகரில் சிறப்புடன் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பின்பு நிறைகுடவிழக்குகள் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்கள் மாணவர்கள், ஆரியரர்கள் புடைசூள மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டு, அகிம்சைத் தாயாம் அன்னை பூபதி அம்மாவிற்கு சுடர்ஏற்றி மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

சிறப்புவிருந்தினர்களாக வடமாநிலத்தின் க்ரோனே நகரின் துணைநகரபிதா திருமதி பிறிகிற் ஸ்ரெர் அவர்களும் எஸ்பிடி கட்சியின் க்ரோனே நகரின் தலைவரும் கொற்றிங்கன் நகரின் தலைமை ஆணையருமான திரு. கிறிஸ்ரீயன் ஜான்சன் அவர்களும் க்ரோனே நகரின் நிர்வாக அலுவலக மேலாளர் திருமதி பிறிகிற் பிற்ச் அவர்களும் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன்; அவர்களும் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொறுப்பாளர்களும் மற்றும் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

காலை 09:00 மணிக்கு மங்கல விளக்கேற்றல், அகவணக்கத்தோடு தொடங்கிய விழாவை, தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களும் மாநில மட்டத்திலான இளையோரின் பங்கேற்பும் ஒன்றாக இணைந்து செம்மைப்படுத்தின. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன்| திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் போன்றவற்றில் தமிழாலய மாணவர்கள் பெற்றுக்கொண்ட திறன்களுக்கான மதிப்பளிப்புகள் சிறப்புடன் அமைய, அம்மதிப்பளிப்புகளுடன் இணைந்து வெற்றிபெற்ற மாணவர்களின் திறன்களை ஒன்றிணைத்ததன் பயனாகத் தமிழாலயங்கள் பெற்றுக் கொண்ட வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகளும் வழங்கப்பட்டன. தமிழாலய நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஓராண்டு உழைத்ததன் அறுவடையாகக் கலைத்திறன் போட்டியில் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளை அரங்கில் கொண்டாடி மகிழ்ந்தனர். வடமாநிலத்தின் கலைத்திறன் போட்டியில் மாநில மட்டத்தில் முதலாம் நிலையை பீலபெல்ட் தமிழாலயமும் இரண்டாம் நிலையை கனோவர் தமிழாலயமும், மூன்றாம் நிலையை பேர்லின் தமிழாலயமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தாய்த்தமிழை வளர்க்கும் தூயபணியில் தமிழாலயங்களில் இணைந்து பணியாற்றிவரும் ஆசிரியப் பெருந்தகைகளினதும் செயற்பாட்டாளர்களினதும் பணித்திறன்களைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும், 20ஆண்டுகள் பணித்திறனாற்றியவர்களுக்கு தமிழ் வாரிதி என்றும் 25 ஆண்டுகள் பணித்திறனாற்றியவர்களுக்கு தமிழ் மாணி என்றும் பட்டமளித்துப் பாராட்டப்பட்டமை சிறப்புக்குள் சிறப்பானது.

பன்மொழிச் சூழலுள் வாழும் தமது பிள்ளைகளைத் தமிழோடு இணைத்துப் பயணிக்க வைத்திருக்கும் தமிழ்ப் பெற்றோரது அயராத உழைப்பும், ஆசான்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பயனாக ஆண்டு 12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு, தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய் விளங்கியது. மதிப்பளிப்பு நிகழ்வுகளின் இடையிடையே தமிழாலயங்களின் மாணவர்கள் வழங்கிய கலைநிகழ்வுகள் அகவை நிறைவு விழாவை மேலும் மெருகூட்டியது. இந்நிகழ்வுகளில் காவடி,கரகம்,பொய்க்காற் குதிரை நடனம் தாயகத்தில் ஆடப்படும் ஆடலுக்கு நிகராக எமது மாணவர்கள் ஆடியமை சிறப்பு.

நிறைவாக விழாவைச் சிறப்பாக நடாத்திய மாநில மட்டத்திலான இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற நம்பிக்கையோடு வட மாநிலத்துக்;கான அகவை நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.