பால்புதுமையினர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையானது அனைத்து இலங்கையர்களுக்குமான உண்மையான சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய மிகமுக்கிய நடவடிக்கையாகும் என்று ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், எனவே அப்பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 106 பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பால்புதுமையினர் (மாற்றுப்பாலினத்தவர், ஒரு பாலின மற்றும் இரு பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்டோர்) தொடர்பில் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தங்களை மேற்கொள்வது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம்.
பெண்கள், சிறுவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினராகிய நாம், இந்தத் தனிநபர் பிரேரணையானது இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்திய முதற்படி என்றே கருதுகின்றோம்.
இப்பிரேரணையானது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைக் குற்றமற்றதாக்குகின்றது என்பது உள்ளடங்கலாக இப்பிரேரணை தொடர்பில் பரப்பப்பட்டுவரும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களைக் குற்றமாக்குவதற்கு அவசியமான அனைத்துக் காரணிகளும் தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் அவை நீக்கப்படவோ அல்லது திருத்தியமைக்கப்படவோ இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே பால்புதுமையின சமூகத்தைத் தவறாகச் சித்தரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளும், அவர்கள்மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் நீண்டகாலமாக இலங்கையின் கல்வி, கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றுக்குப் பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச்செய்த ஓர் சமூகத்தை மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் பால்புதுமையின சமூகத்தினர் அவமதிப்புக்கும், சித்திரவதைகளுக்கும், கட்டாயப் பரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுவருவதுடன் அவர்களுக்குரிய வேலைவாய்ப்பு, வீடமைப்பு வசதி, சுகாதாரசேவை என்பன மறுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ‘இலங்கையர்’ என்ற தமது அடையாளத்தை முழுமையாக அனுபவிப்பதற்கும், தமது அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பால்புதுமையின சமூகத்தினர் கொண்டிருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையானது அனைத்து இலங்கையர்களுக்குமான உண்மையான சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய மிகமுக்கிய நடவடிக்கையாகும். எனவே இப்பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.