புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்லினத்தவரையும், பல்துறைசார் நிபுணர்களையும், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய நம்பத்தகுந்த பொறிமுறையாக அமையவேண்டியது அவசியமெனத் தமது இறுதி அறிக்கையில் வலியுறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 30 ஆணையாளர்களை உள்ளடக்கியிருக்கவேண்டுமெனப் பரிந்துரைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகிய மூவரடங்கிய ஆணைக்குழு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை முடிவுக்குவந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆணைக்குழுவுக்கான ஆணை முதலில் இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரையும், பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டு, தற்போது எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் மேமாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கக்கூடியவகையில் தயாராகி வருகின்றது. இதுஇவ்வாறிருக்க ஏற்கனவே ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையிலும், கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட சுருக்கத்திலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவேண்டும் என்ற பரிந்துரை வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் இதுகுறித்த அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கட்டமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய விரிவான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்லினத்தவரையும், பல்துறைசார் நிபுணர்களையும், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய நம்பத்தகுந்த பொறிமுறையாக அமையவேண்டியது அவசியமென ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அதேபோன்று தென்னாபிரிக்கா, கொலம்பியா, இலத்தீன் அமெரிக்கா உள்ளடங்கலாக சர்வதேச நாடுகளில் இயங்கிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய ஒப்பீடுகளை உள்ளடக்கியும், இலங்கையில் கடந்தகாலங்களில் இயங்கிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை ஒன்றிணைத்து எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளை இணைத்தும் தமது இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது 30 ஆணையாளர்களை உள்ளடக்கியிருக்கவேண்டுமெனப் பரிந்துரைப்பதற்கு நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.