இந்நாடு பெளத்த நாடென்றும், தர்மத்தின் தீவு இலங்கை என்றும் கூறப்படும் இந்நாட்டில் தர்மம் நிலை நாட்டப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக சர்வதேசத்தை நாடுவதற்கு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட குழுவினருக்கு ஓமல்பே சோபித்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையை மறைத்து வருகின்றமை தெட்டத் தெளிவாக விளங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய சோபித்த தேரர்,
“உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் என்பது யாது? இதற்கு பின்னணியில் இணைந்துகொண்ட சக்திகள் என்ன? அதில் மறைந்துள்ள உண்மை என்ன? இந்த விடயங்கள் குறித்த உண்மைத் தன்மையை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கான உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காவே, ஆயிரக்கணக்கான மக்கள் கட்டுவப்பிட்டியிலிருந்து தங்களை வறுத்திக்கொண்டு நடை பவனியாக கொழும்பு வந்தனர். இவ்வாறு அவர்கள் மேற்கொண்ட வேண்டுதல்களின் பலனாக அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஆட்சியாளரின் முக்கிய பண்பு என பெளத்த மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது பொறுப்புக்களை தட்டிக்கழித்து கடமைகளை சரிவர செய்யாது அசமந்தமான போக்குடைய மோசடிமிக்க ஆட்சியாளர்கள் உள்ள ஒரே நாடு இலங்கையாகும். மக்கள் சொத்துக்களை தந்திரமாக அபகரித்த ஆட்சியாளர்கள் உள்ள ஒரே நாடு இலங்கையாகும்.
இவ்வாறு தந்திரமாக மக்கள் பணத்தையும் சொத்துக்களையும் கொள்ளையிடுபவர்களுக்கு ஆசீர் வழங்கும் ஆன்மீக தலைவர்கள் உள்ள ஒரே நாடு இலங்கையாகும். இவை அனைத்தையும் கண்டுகொண்டு உதாசீனமாக இருக்கும் மக்கள் கூட்டம் இருக்கின்ற ஒரே நாடும் இலங்கையாகும்.
தர்மத்தின் தீவு என கூறப்படுகின்ற இலங்கைத் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சர்வதேசத்தை நாடுவதற்கு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட குழுவினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் ” என்றார்.