ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி வாகனப் பேரணி நடத்துவத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று (05-03-2017) காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு முன்பு கூடி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் மீது திணிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு பேரணியாக புறப்படும் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் கலைந்து செல்லுமாறு கூறினர். பின்பு தலைவர்கள் கூடி பேரணியாக செல்லாமல் தனித்தனியாக அவரவர் வாகனங்களில் அவரவர் வீடுகளுக்கு சென்று நெடுவாசலில் சந்திக்குமாறு முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் காவல்துறையினர் அனுமதிக்காமல் கைது செய்வதாக அறிவித்தனர்.
நெடுவாசல் செல்ல எந்த தடையும் இல்லாத நிலையில் ஏன் கைது செய்ய வேண்டும் என்று தலைவர்கள் காவல்துறையினரை நோக்கி கேள்வி எழுப்பிய போது, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இங்கு கூடியது குற்றம் என்றும் அதனால் கைது செய்வதாக கூறினார். பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று கூறியும், மத்திய பாஜக காவி அரசிற்கு துணை போகும் தமிழக காவல்துறையை கண்டித்தும் குழுமியிருந்த தோழர்கள் அனைவரும் பெரியார் சிலைக்கு முன்பாக சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து காவல்துறை அராஜகத்துடன் செயல்பட்டு அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்தனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ்ப் புலிகள், காஞ்சி மக்கள் மன்றம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் விடியல் கட்சி மற்றும் மே பதினேழு இயக்கம் கலந்துகொண்டது.
நெருப்புக்கா கொடுப்போம் நெடுவாசலை – ஆவணப்படம்
நெடுவாசல்… புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமையாக இன்னும் விவசாயத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் மனிதர்கள் வாழும் ஊர். இங்கு தான் மக்களின் உடல்நலத்தோடு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் “ஹைட்ரோ கார்பன்” எனப்படும் நீர்க்கரிம பொருட்களான எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டம் அரசு மற்றும் தனியார் எரிவாயு நிறுவனங்களால் செயல்படுத்தப்படபோகிறது.
சமீப காலங்களில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்காக மத்திய அரசின் உதவியால் . கொள்ளையிடப்படுகிறது . தமிழக மக்களின் வாழ்வாதாரங்கள் மட்டுமல்லாது உரிமைகள், சூழலியல் அனைத்தும் பறிபோகிறது. வீதிக்கு வந்து போராட தயங்குவோமானால் வீட்டிற்குள் நுழையப்போகும் ஆபத்துக்களை எதிர்கொள்ள இயலாது. பாதுகாப்பான வாழ்வு என்பது கொடுங்கனவாக மாறும் நிலை நமது எதிர்கால தலைமுறைக்கு வேண்டாம். “வாடிவாசல்” தமிழர்களின் பண்பாட்டிற்கான அடையாளம் என்றால் “நெடுவாசல்’ தமிழர்களின் எதிர்காலத்திற்கான அடையாளம்.