கிளிநொச்சி – சாந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கலைமகள் வித்தியாலயத்தை உயர்தரத்துடன் கூடிய பாடசாலையாக தரமுயர்த்த அதிகாரிகள் பின்னடிப்பது ஏன் எனக் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமது கிராமத்தைத் தொடர்ந்தும் வளர்ச்சிப் பாதைக்குள் கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் மறுக்கின்றனரா எனக் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேற்றைய தினம் (19.04.2023) குறித்த கிராமத்தின் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தினை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, அண்மையில் வெளியான சாதாரண தர பெறுபேறுகளில் 31 பேர் தோற்றி 28 பேர் உயர் தரத்திற்கு நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 450க்கு மேற்பட்ட மாணவர் தொகை கொண்ட குறித்த பாடசாலையை உயர்தர பாடசாலையாக மாற்றுவதற்கு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். குறித்த கோரிக்கைக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், உயர் தரத்துக்குத் தகுதி பெற்றுள்ள 28 மாணவர்களில் 5 மாணவர்கள் வேறு பாடசாலைகளிற்குச் சென்றுள்ள போதிலும், வசதி குறைந்த 23 மாணவர்கள் தையல் தொழிற்சாலைக்குப் போவதா அல்லது வேறு தொழில்களிற்குப் போவதற்கும் தயாராகி வருகின்றனர்.
எமது மாணவர்களின் கல்வி இடைநடுவில் விடப்படுவதற்கான சூழலைக் கல்வி சமூகமே ஏற்படுத்தி வருகின்றது. இதற்குப் பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார் என்பதை அறிய முடியாதுள்ளது. எமது பாடசாலை கிராமப்புறத்தில் அமைந்துள்ளதால் அதன் வளர்ச்சியை விரும்பவில்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது.
அத்துடன், எமது கிராமத்திலிருந்து திருவையாறு பாடசாலை 6 கிலோமீட்டரில் உள்ளது. ஏனைய பாடசாலைகள் மேலும் தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரம் சென்று கல்வி கற்கக்கூடிய சூழல் எமது பிள்ளைகளிற்கு இல்லை. சைக்கிளில் சென்று கற்க முடியாமல் பலர் கல்வியை இடைநடுவில் விடுகின்றனர்.
பேருந்து சேவையும் எமது கிராமத்திற்கு இல்லை. மற்றும் எமது கிராமத்தில் உள்ள பாடசாலையைத் தரம் உயர்த்தினால் உயர் கல்வியைப் பெற்ற எமது கிராமமும் வளர்ச்சி அடையும். அதற்கான வளங்கள் காணப்பட்டாலும் முன்னெடுத்த செல்வதற்கு அதிகாரிகள் தயங்குகின்றனர்.
நாங்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எமது வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. எனவே, எமது கோரிக்கையை ஏற்று விரைவாக எமது பாடசாலையைத் தரம் உயர்த்தி உயர் கல்விக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வு்ணடும் எனப் பிரதேச கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.