“எங்களுக்கு எதிராக செயல்பட்டால் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ தினத்தையொட்டி, ஈரானின் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் ஈரான் அதிபர் இப்ராஜிம் ரெய்சி இதனை பேசினார். \ ரெய்சி பேசும்போது தெஹ்ரான் வானில் ராணுவ விமானங்களும், கடற்கரையில் போர் விமானங்களும் அணிவகுத்து சென்றதாக அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “எதிரிகள்… குறிப்பாக இஸ்ரேல் நம் நாட்டிற்கு எதிராக எடுக்கும் சிறிய நடவடிக்கைகளுக்குக் கூட கடுமையான பதிலடியை நம் படை தரும். பிராந்தியத்தின் அமைதியை வழி நடத்தும் நட்பு நாடுகளுடன் எங்கள் படை நட்புடன் கைகுலுக்கும். மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும்” என்று கோபமாக தெரிவித்தார்.
முன்னதாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.