உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அச்சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், அடுத்த வாரமளவில் அச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதில் எவ்வித பயனுமில்லை எனவும், மாறாக இச்சட்டமூலம் முழுமையாக நீக்கப்படவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன மீளவலியுறுத்தியுள்ளன.
குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியில், அதற்குப் பதிலாக அதனைவிடவும் மோசமான புதிய சட்டமொன்று கொண்டுவரப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், மாறாக அவசியமேற்படின் குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியும் எனவும், புதிய சட்டங்கள் எவையும் அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கும் அதேவேளை, அதற்குப் பதிலாகப் புதிய சட்டங்கள் எவையும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச அழுத்தங்களின் விளைவாகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கே வழிவகுக்கும் என்றும் கரிசனை வெளியிட்டுள்ளார்.