மின்சார நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை (ஏப்.20) மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தில் 150 அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) மாநில தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள கொசிமா அலுவலகத்தில் மாரியப்பன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 8 ஆண்டு காலம் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் தற்போது உயர்த்தியுள்ளனர். தொழில் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் மின்சார கட்டணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பீக் ஹவர்’ 3 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக உயர்த்தியுள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இலவச மின்சாரத்தை கேட்க வில்லை. தங்களால் முடிந்தளவு செலுத்தும் வகையில் மின்கட்டணத்தை குறைக்கவே கேட்கிறோம். தமிழகத்தில் உள்ள 130 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 24 தொழிற்பேட்டைகளுக்கு 99 ஆண்டு குத்தகை முறையை ரத்து செய்ய வேண்டும்.
நில மனைகளை விற்பனை பத்திரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். கோவையில் கொடிசியா தவிர, 22 அமைப்புகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்க உள்ளன. தமிழகம் முழுவதும் 150 அமைப்புகள் இந்த ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்து பல முறை பேசியுள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.