தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி, சட்டப்பேரவையில் நேற்று முதல்வரிடம் நேரில் அளித்த கடிதத்தில், “தொழிற்சாலைகள் திருத்தச்சட்டம் 65ஏ என்பது விருப்பம்போல தொழிலாளர்களை சுரண்டுவதற்கு தங்கு தடையற்ற அதிகாரத்தை முதலாளிகளுக்கு வழங்குகிறது.
தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்றுதொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது மோசமான பின்விளைவுகளை உருவாக்கும். விவாதமோ, வாக்கெடுப்போ இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை தமிழகம் போன்ற ஒரு மாநிலம் நிறைவேற்றுவது எந்த வகையிலும் நியாயமற்றது.
இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படாத நிலையில் இதனை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முடிவுமேற்கொண்டது நாடு முழுவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும். எனவே, தொழிலாளர்களுக்கு விரோதமான, பிற்போக்குத்தனமான இந்த சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.