அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் ஏறும்போது காணாமல் போன மலையேற்ற வீராங்கனை உயிருடன் மீட்பு!

215 0

அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் ஏறும்போது காணாமல் போன மலையேற்ற வீராங்கனை உயிருடன் மீட்கப்பட்டார்.

இமய மலை அடிவாரத்தில் இருக்கும் நேபாள நாட்டில் ஏராளமான மலைப் பகுதிகள் உள்ளன. இங்குள்ள மலைப் பகுதிகளில் மலையேற்ற சாகச வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் மலையேறி செல்வதுண்டு. அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர் நேபாளத்தில் அண்மையில் மலையேறிச் செல்லும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவர், இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்ணா மலையை சென்றடைய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் அங்கு திடீரென்று காணாமல் போனார்.

27 வயதான மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர், அன்னபூர்ணா மலையிலுள்ள 4-வது முகாம் பகுதியிலிருந்து காணாமல் போனதாக அவருடன் சென்ற குழுவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவரைத் தேடும் பணி நடைபெற்றது. மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன. அப்போது அவர் உதவி கேட்டு அனுப்பிய ரேடியோ செய்தி மீட்புக் குழுவினருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, அவர் அன்னபூர்ணா சிகரத்திலுள்ள ஒரு குன்றில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கொண்டு சென்ற கூடுதலான ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் அந்த மலைப்பகுதியில் தங்கி உள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மலையடிவாரத்துக்கு அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.