யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் உடனடியாகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்திருக்கவேண்டும்.
இருப்பினும் தாமதமாகவேனும் இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள தென்னிலங்கை அரசியல் கட்சிகள், இருப்பினும் இதன் பின்னணியிலுள்ள அரசாங்கத்தின் நோக்கம் குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன.
மூன்று தசாப்தகாலமாக நாட்டில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போது பதிவான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுத்து நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகம் இலங்கையைத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டதையொத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
அரசாங்கத்தின் காலம் கடந்த இம்முயற்சியை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள தென்னிலங்கை அரசியல் கட்சிகள், இருப்பினும் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் குறித்தும், இதனூடாக அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் பெறுபேறு கிட்டுமா என்பது குறித்தும் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, தாமதமாகவேனும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் விளைவாகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது என்ற போதிலும், இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்ற பயன் கிட்டுவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத் தீர்வை வழங்குகின்ற உண்மையான நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்பதைத் தம்மால் உறுதியாகக் கூறமுடியாதெனக் குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு வெளியானதன் பின்னரே ஏனைய விடயங்கள் தொடர்பில் கூறமுடியும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் உடனடியாகவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், போரின் பின்னரான மறுவாழ்வுக்கான தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் 26 ஆம் திகதி தாம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், இருப்பினும் அரசாங்கம் அதனைச் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வாக்குறுதியளித்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்த விஜித்த ஹேரத், யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதென்பது மிகமிகத் தாமதமான நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்டார்.
‘எனினும் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவி, அதனூடாக ‘கடந்தகால காயங்களை ஆற்றுவதற்குரிய’ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அதனை வரவேற்கின்றோம். இருப்பினும் இது அரசாங்கத்தின் ‘நேர்மையான’ நடவடிக்கையா என்பதில் எமக்கு சந்தேகம் உள்ளது’ என்றும் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியதாவது:
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் நோக்கில் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் அலி சப்ரி ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் தென்னாபிரிக்காவிலும் இலங்கையிலும் இடம்பெற்றவை இருவேறு சம்பவங்களாகும். தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளையர்களால் திட்டமிட்டவகையில் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. இருப்பினும் இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவருவதை முன்னிறுத்திய யுத்தமே இடம்பெற்றது. எனவே தென்னாபிரிக்காவில் இயங்கிய உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலக மாதிரி இலங்கைக்குப் பொருந்துமா? என்ற சந்தேகம் நிலவுகின்றது.
அதேபோன்று கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்த எந்தவொரு உள்ளகப்பொறிமுறையையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஊக்குவிக்கவோ, ஆதரவளிக்கவோ இல்லை. அதுமாத்திரமன்றி அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கும் இடமளிக்கவில்லை. அதன் விளைவாகவே இலங்கை தொடர்பில் 30ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர்கள் எம்மைத் தண்டிக்கவேண்டும் என்றே கருதுகின்றார்கள். அவர்களின் அனுமதியின்றி நாம் யுத்தத்தை வென்று, அதனை முடிவுக்குக்கொண்டுவந்தமையே அதற்குக் காரணமாகும். எனவே தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டாலும்கூட, அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஏற்குமா என்ற கேள்வி உள்ளது என்று தெரிவித்தார்.