ஊடக செயலாளருக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினை எழுப்ப சந்தர்ப்பம் வழங்கவேண்டும்!

145 0

பாராளுமன்ற நடவடிக்கை ஒன்று தொடர்பாக என்னால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து பிழையான கருத்தொன்றை நீதிமன்றத்திலும் பொது மக்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதற்கு முயற்சித்து மற்றும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்து எனது பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தியமை தொடர்பில் சபாநாயகரின் ஊடக செயலாளருக்கு எதிராக சிறப்புரடிமை பிரச்சினை எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கி சட்டமூலத்தின் எந்த ஒரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என சபாநாயகர் தெரிவித்த கருத்தை உடனடியாக சரி செய்வதற்கு முன்வருமாறு தெரிவிப்பது மனுதார பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் என்மீதான கடமை என்பதுடன் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முறையாக வாசிக்காமல் பிழையான ஆலாலோசனையின் அடிப்படையில் தெரிவித்திருந்தீர்கள். அதனாலே நான் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தேன்.

வரலாற்றில் முன்வைக்கப்பட்டிருந்த மிகவும் பலவீனமான சட்டமூலம் ஒன்று எந்த சரத்தும் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாக அறிவிப்பு செய்து, உயர் நீதிமன்றத்தின் கெளரவத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குறித்த அறிவிப்பு பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றத்துக்கு  இடையில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு தூண்டுவதாக இருக்கிறது.

அதேநேரம், குறித்த அறிவிப்பு சட்டமூலத்தின் பலவீனங்களை உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த சட்டத்தரணிகள் குழுவுக்கும் அவமானமாகும் என்பதுடன் சட்டமூலத்தை நீதிமன்றத்திற்கு முன் சவாலுக்குட்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முறைப்பாட்டாளர்களையும் சங்கடமான நிலைக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது.

எனவே பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் மூலம்  எனக்குரித்தான சிறப்புரிமை, சபாநாயகரின் ஊடக செயலாளரின் செயற்பாடுகளால் மீறப்படுகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.