கவனயீர்ப்புப்போராட்டத்தையடுத்து பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.

283 0

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தையடுத்து இராணுவமுகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஒரு மாதகாலமாக புதுக்குடியிருப்பு பிரதேச செலகம் முன்பாக  கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது காணிகளுக்குள் அத்துமீறி உட்செல்வோம் என்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்த நிலையில் கடந்த மாதம் 14ம் திகதி பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை இயங்கிய தனியார் காணியினை அண்டிய மூன்று காணிகளின் பிரதான நுழைவாயில்களில் முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் போராட்டம் நடைபெற்ற பகுதியின்                 முன்பாகவுள்ள மூன்று பிரதான வாயில்களும் மூடப்படந்திருந்தன.

நேற்று காலை 8.30 மணிக்கு குறித்த பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளில் 7.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதையடுத்து மக்களின் போராட்டமும் கைவிடப்பட்டது.

இதனையடுத்து மூன்று நுழைவாயில்களுக்கும்  போடப்பட்ட பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டுள்ளன.