மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பேக்கரி உரிமையாளர், தனது பேக்கரி வேலைகளுக்காக திருகோணமலை பிரதேசத்தில் இருந்து 20 வயது இளைஞர் ஒருவரை அழைத்துவந்து, தனது விடுதியில் தங்கவைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதி மக்கள் பேக்கரி உரிமையாளரின் நடத்தையை அவதானித்துவிட்டு, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவ்விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் பேக்கரி உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததுடன், குறித்த இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இதேவேளை கைதானவர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.