தென்மராட்சியைச் சேர்ந்த அருந்தவபாலனின் சாதியைக் குறிப்பிட்டதுடன், நீங்கள் என்ன சாதியெனக் குறிப்பிட முடியுமா என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பகிரங்கமாக இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென தமிழரசுக் கட்சியின் ஒரு அணி விரும்பியது. விக்னேஸ்வரனை கவர்ச்சியான வேட்பாளராகத்தான் அப்போது நினைத்தேன்.ஆனால் இப்பொழுது வேறு விதமாக அபிப்பிராயமுள்ளது.
விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென்றால், முதலில் ஐங்கரநேசனை அகற்ற வேண்டுமென நினைத்தார்கள். இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்கள்.விக்னேஸ்வரன் எம்மை பதவி விலகக் கேட்டார்.பதவி விலகினோம்.
ஆனால் விக்னேஸ்வரன் பின்னர் நேர்மையாக நடக்கவில்லை. அவர் மாகாண முதலமைச்சராக இருந்ததற்கும், ஒரு கட்சியை ஆரம்பித்தற்குமிடையில் நிறைய வித்தியாசமிருந்தது.விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பித்த பின் கைதேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார். மாகாண சபையில் எங்கள் மீதான குற்றச்சாட்டின் போது நான் பதவி விலகத் தயாராக இருந்தேன்.குருகுலராஜா அதை விரும்பவில்லை.
விக்னேஸ்வரன் என்னையே குருகுலராஜாவிடம் தூது அனுப்பினார். எம் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி நீதியான, பக்கச்சார்பற்ற திணைக்கள ரீதியான விசாரணை மேற்கொள்வதாக உத்தரவாதமளித்தார்.
இதையடுத்து குருகுலராஜாவிடம் நான் சென்று பேசினேன். குருகுலராஜா பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார்.அது நடக்காவிட்டால், அவரும் டெனீஸ்வரன் மாதிரி நிலைப்பாடு எடுத்திருப்பார்.
இதன்பின்னர், விக்னேஸ்வரன் பிரதம செயலரின் ஊடாக விசாரணைக்குழுவொன்றை அமைத்து, அறிக்கை பெற்றிருந்தார்.மாகாண சபை கலைந்த பின்னர்தான் எனக்கு அது தெரியும்.
இது தொடர்பில் நான் பிரதம செயலரிடம் கேட்டபோது, விக்கினேஸ்வரன் கோரியதன்படி விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அந்த அறிக்கையைப் பெற்றோம். அந்த அறிக்கையில், அனைத்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
நான் விக்னேஸ்வரனிடம் போய் இதைப்பற்றி கேட்டேன். அப்படியா ! ஐங்கரநேசன். எனக்கு தெரியாதே என்றார்.
இதற்கமைய உங்கள் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டு, வாங்கப்பட்டுள்ளது என்றேன். சிலவேளை செயலர் தன்னிடம் கையளிக்காமல் விட்டிருக்கலாம் என்றார். அது பொய். அவருக்கு அது தெரியும்.
விக்னேஸ்வரன் தன்னை ஒரு உத்தமனாகத் தொடர்ந்தும் நிரூபிக்க அவர் விரும்பினார். தன்னுடைய நீதியின் கீழ் தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டது என்பதை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
அதனால் அவருடன் தொடர்ந்து பயணிப்பதற்கான விருப்பம் என்னிடமில்லை.
விக்னேஸ்வரன் அரசியலில் இருக்க விரும்புகிறார். என்னுடைய பார்வையில், அவர் அரசியலில் இருப்பதற்கான சில தகுதிகள் இல்லை.
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் மின்னஞ்சல் ஒன்றை அவர் அனுப்பியிருந்தார்.
அருந்தவபாலனின் சாதியைக் குறிப்பிட்டு, உங்களது சாதியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்கள், உங்களுடைய சாதியென்ன என அறியலாமா? என அவர் கேட்டிருந்தார். நீங்கள் என்ன சாதியாக இருந்தாலென்ன, உங்கள் மீது எனக்குள்ள அன்பு ஒரு துளி கூடவோ, குறையவோ மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நான் பதில் போடவில்லை. அவரிடம் நேரில் சென்று சொன்னேன். நாங்கள் போராட்டப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். சாதி ஒடுக்குமுறை போன்றவற்றை ஒழிப்பதற்காகவும் போராட வந்தவர்கள்.என்னிடம் கேட்டதைப் போல இன்னொருவரிடம் கேளாதீர்கள் என தெரிவித்தேன்.