இந்தியா-இலங்கை இடையே உள்ள கடல் பகுதியில் நீந்தி பலர் சாதனை படைத்துள்ளனர். இலங்கை தலை மன்னார்-தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 1994-ம் ஆண்டு குற்றாலீஸ் வரன் தனது 12 வயதிலும், 2019-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் நீந்தி கடந்தனர்.
அதேபோல் ஆட்டி சத்தால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த ஜியாராய் என்ற 13 வயது சிறுமி 2012-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதியும், தேனியை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் அதே மாதத்தில் 29-ந்தேதி யும் தலைமன்னார்-தனுஷ் கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்தனர். இவர்களை போன்றே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இந்த கடல் பகுதியை நீந்தி கடந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார். சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் நீச்சலில் ஆர்வம் கொண்டவர். தனது 4 வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் இவர், அதில் பல சாதனைகளை படைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார்.