சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மத்தை ஏற்கும் சக்திகள் நாடு முழுவதும் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

125 0

சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல்களையும் ஏற்கும் சக்திகள், இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஒன்று சேர வேண்டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

திமுக சார்பில், இப்தார் நோன்புதிறப்பு நிகழ்ச்சி, திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இது திமுக இப்தார் நிகழ்ச்சிமட்டுமல்ல; அனைத்து இஸ்லாமிய மக்களின் விழாவாக இதுஅமைந்துள்ளது. இதில் கட்சி பேதமில்லை; அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அழைக்கப்படுவதால், இதில் மத வேறுபாடுகளும் கிடையாது. ஒற்றுமையை வலுமைப்படுத்தும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடக்கம், இரக்கம், அன்பு, ஈகை ஆகிய அருங்குணங்கள்தான் திருக்குரானில் அதிகம் சொல்லப்பட்டுள்ளது. திமுக முதலில் எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அப்போதிலிருந்து சிறுபான்மையினருக்காக பல்வேறு திட்டங்கள் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கருணாநிதி. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சி அதனை ரத்து செய்தது.

3.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு: மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அரசு விடுமுறை அறிவித்தார். சிறுபான்மையினர் நல வாரியம், உருது அகடாமி தொடங்கியதும், 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு உருவாக்கியதும் கருணாநிதி என சொல்லிக்கொண்டே போகலாம். கருணாநிதியின் வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்சி அமைந்ததும் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள், கோரிக்கை வைக்காமல் செய்து கொடுத்துள்ளோம்.

திராவிடக் கொள்கைகள்: சட்டப்பேரவையில் நேற்றுசிறுபான்மை நலத் துறை சார்பில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது துறை அமைச்சர் மஸ்தான், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கோரிக்கை வைக்காமல் செய்யும் இந்த அரசு கோரிக்கை விடுத்தும் செய்யாமல் விட்டுவிடுமா? உறுதியாக சொல்கிறேன் இது திராவிட மாடல் அரசு, கருணாநிதி வழியில் செயல்படும் உங்களுக்காக செயல்படும் அரசு. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்று இந்த திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவுவதை பார்க்கிறோம்.

இந்தியாவை காப்பாற்றும் ஆற்றல் சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகியவற்றுக்குதான் உள்ளது. இந்த மூன்று கருத்துகளையும் ஏற்கும் ஜனநாயக சக்திகள் நாடு முழுவதும் ஒன்று சேர வேண்டும். இந்த ஒற்றுமையானது தேர்தலுக்காக மட்டுமல்ல; இந்தியாவின் எதிர்காலத்துக்காகவும் ஏற்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர், செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், அரசு தலைமை காஜிக்கள் சலாவுதீன் முகமது அயூப், குலாம் முகமது மெஹ்தி கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.