போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் போரூரில் ட்ரையத்லான், டுயத்லான் போட்டிகள்

117 0

போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்துக்கான, ‘ட்ரையத்லான்’ மற்றும் ‘டுயத்லான்’ போட்டிகள் நேற்று ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இவ்விரு போட்டிகளில்480-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில், ஆவடி காவல் ஆணையரகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு அக். 2-ம் தேதி ஆவடி பகுதியில் இரவு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்துக்கான, ‘ட்ரையத்லான்’ மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான, ‘டுயத்லான்’ ஆகிய இரு போட்டிகள் நேற்று சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

ஆவடி காவல் ஆணையரகத்தோடு, இந்தியன் ட்ரையத்லான் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய நீச்சல், சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓட்டம் ஆகிய 3 விளையாட்டுகளை உள்ளடக்கிய, ‘ட்ரையத்லான்’, ஓட்டம், சைக்கிள் ஓட்டம் ஆகிய இரு விளையாட்டுகளை உள்ளடக்கிய, ‘டுயத்லான்’ போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

3 பிரிவுகளில், ஆண்கள், பெண்களுக்கு 750 மீட்டர் தூரத்துக்கு நீச்சல், 20 கி.மீ. தூரத்துக்கு சைக்கிள் ஓட்டம், 4 கி.மீ. தூரத்துக்கு ஓட்டம் என, ‘ட்ரையத்லான்’ மற்றும் 4 கி.மீ. தூரத்துக்கு ஓட்டம், 20 கி.மீ. சைக்கிள் ஓட்டம், 2 கி.மீ. ஓட்டம் என, ‘டுயத்லான்’ ஆகிய இரு போட்டிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களில் இருந்து, 16 வயது முதல், 40 வயதுக்கு மேற்பட்டோர் என, 480-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு மினி மாரத்தான்: அதுமட்டுமல்லாமல், ஒரு கி.மீ. தூரத்துக்கு நடைபெற்ற போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ட்ரையத்லான், டுயத்லான் போட்டிகளில் வென்றவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் ஆசிய விளையாட்டு போட்டி, இளையோருக்கான காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.