கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது முன்னால் வந்த காருடன் மோதியதில் அதில் பயணித்த ஒன்றரை வயது சிறுமி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த தந்தையும் 8 வயது மகளும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், பலத்த காயமடைந்த ஒன்றரை வயது மகளும் தாயும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய், தந்தை மற்றும் மகள்கள் இருவர் புத்தாண்டுக்கு தேவையான உடைகள் மற்றும் உணவுகளைப் பெற்றுக் கொண்டு காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் ஒன்று திடீரென சாலையை விட்டு விலகி எதிரே வந்த குறித்த கார் மீது மோதியது.
மீகொட பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற இந்த விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி மதுபான விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார் என்றும் இவர் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.