தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் நாளை (ஏப்.15) தொடங் குகிறது. அடுத்த 2 மாதங்களுக்கு 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாது.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளை (ஏப்ரல் 15) அமலுக்கு வருகிறது. ஜூன் 14 வரை இந்த தடை அமலில் இருக்கும்.
இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத் துக்குடி, ராமநாதபுரம், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும்.
இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்களில் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.