பிறக்கும் சோபகிருது வருடம் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையோடு தலைநிமிர்ந்து வாழும் ஆண்டாக மலரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் இன்னுமொரு புத்தாண்டை வழமை போல் மீண்டும் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளோடும், நம்பிக்கைகளோடும் வரவேற்கிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் எழுபத்து ஐந்து ஆயிற்று என்று ஏட்டில் எழுதிப் படிக்க வேண்டிய நிலையில் இன்று உள்ளோம்.
கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக பல்வேறு துயரங்களையும் சந்தித்துக் கையறு நிலைக்கு வந்த எமது சமுதாயம் யுத்த அனர்த்தம் முடிந்து நிம்மதிப் பெருமூச்சு விடலாமென ஏங்கியபோது யுத்தத்திற்குப் பின்னரான காலமும் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும் சோதனைகளையும் வேதனைகளையும் தந்தவண்ணம் உள்ளது.
சாணேற முழம் சறுக்கும் என்ற பழமொழி ஈழத்தமிழ் மக்களுக்கே உரித்தானதாகவுள்ளது. எனவே மலரும் புத்தாண்டு தமிழ் மக்களுக்கு நல்வாழ்வைக் கொண்டு வரவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் சொந்த நிலங்கள் இன்னமும் பூரணமாக விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் நிலை குறித்து அரசு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப் படவில்லை.
மேலும், சிறுபான்மையினத்தவரின் வணக்கஸ்தலங்களை அழித்தல், சேதமாக்கல் அவர்களின் குடிப்பரம்பலை மாற்ற முயற்சித்தல், மத மாற்றங்கள் போன்ற கைங்கரியங்களில் பெரும்பான்மையினருடன் இணைந்து ஏனைய மதத்தினரும் ஈடுபடுவதுடன், இந்துக் கோயில்களிலுள்ள விக்கிரகங்கள் களவாடப்படுவதும் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகவுள்ளது.
நீதிமன்றங்களின் தீர்ப்புக்களுக்குத் தமிழ் மக்களே கட்டுப்பட வேண்டும் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு அண்மைய வெடுக்குநாறி மலை ஆதி விங்கேஸ்வரர் ஆலய விவகாரமும் அதை பார்வையிடச் சென்ற தமிழ் அமைச்சர்களின் கூற்றுக்களும் அமைந்து வேதனை தருவதாக உள்ளது.
குறிப்பாக, இன்றும் முல்லைத்தீவில் தமிழர்களுக்குச் சொந்தமாக ஒரு பகுதி நிலம். பெரும்பான்மையினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய வரும் செய்திகள் தமிழர்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதாக உள்ளது.
சமயப்பணியுடன் சமூகப்பணிகளையும் மேற்கொண்டு வரும் இந்து மாமன்றம் தமிழ் மக்களுக்கு எங்கெல்லாம் வேதனைகள் சோதனைகள் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் உதவி செய்து வந்திருக்கின்றது.
தமிழ் மக்களது வாழ்நாளில் தொடரும் துயரநிலை முற்றாக நீங்கி, உதயமாகும் புத்தாண்டில் சுயநிர்ணய உரிமையுடனான ஒளிமயமானதொரு எதிர்காலம் எம்மக்களுக்கு கிட்ட அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எல்லாம் வல்ல சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்.