பற்களும் சொற்களும்…!

154 0

” விரோத மனப்பான்மையின்றி எதை செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்” – கெளதம புத்தர்

கெளதம புத்தரின் பற்களை  புனித தந்தங்கள் என்று அழைப்பர். அவ்வாறான  தந்தங்கள் பெளத்தர்களின் மிக உயர்ந்த புனித பொக்கிஷங்களாக,  கண்டி தலதா மாளிகையில்  வழிபடப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

அதே போன்று புத்தரின் சிந்தனைகளின் வாயிலாக உருவான அவரது போதனைகள்  இன்று உலகம் முழுதும் இன,மத பேதமின்றி பலராலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் புத்தரின் புனித தந்தங்களை (பற்களை)  பாதுகாத்து வரும் இலங்கை பெளத்தர்களில் சிலர் அவரின் சொற்களை பின்பற்றாமல்  கடந்து செல்கின்றனர்.

அவரின் பெயரால் இலங்கையின் நடக்கும் ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும்  அளவு கடந்து செல்கின்றன. தமிழர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் மாத்திரமின்றி தெருவோரங்களிலும் சந்திகளிலும்  வலுக்கட்டாயமாக புத்தர் சிலைகளை இரவோடிரவாக வைத்து அவரின் புனிதத்தை கேள்விக்குறியாக்குகின்றனர்.

இலங்கையில் பெளத்தர்களாக இருக்கும்  அனைவரும்  கடும் போக்குடையவர்கள் அல்லர்.  ஆனால் கடும் இனவாதத்துடன் நடந்து கொள்ளும் சிலரும் பெளத்தர்களாக மாத்திரமே இருப்பது தான் இங்கு பிரச்சினை.

நல்போதனைகளால்  நிரம்பியுள்ள பெளத்த மதம் குறித்த சந்தேகங்களை, ஏனைய மதத்தவர் மத்தியில் உருவாக்குவதாக இது உள்ளது. இவ்வாறானவர்களின்  மனப்போக்கை மாற்றியமைத்து அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய ஒரே பிரிவினராக பெளத்த பிக்குகளே உள்ளனர். அவர்களின் பிரதான கடமையாகவும் அது உள்ளது.

ஆனால் இங்கு நடப்பதென்ன? கடும் போக்காளர்களுடன் இணைந்து சில பிக்குகளும் புத்தபெருமானுக்கும் அவரது போதனைகளுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்துபவர்களாக உள்ளனர்.

குருந்தூர் மலை, கீரிமலை, வவுனியா வெடுக்குநேறிமலை, புல்மோட்டை என தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில்  பெளத்த மத அடையாளங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் செயற்பாடுகளுக்கு  இந்த கடும்போக்காளர்களுடன் இணைந்து பிக்குகளும் ஆதரவாக உள்ளனர்.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு  யுத்தம் முடிவுக்கு வந்தாலும், ஏதாவதொரு வடிவத்தில்    இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு எதிரான ஒரு வகை யுத்தம் இன்னும் முன்னெடுக்கப்பப்பட்டே  வருகின்றது.

இனம்,மதம்,மொழி கடந்து அனைத்து தரப்பினரும் நாட்டுக்காக கை கோர்த்த காலிமுகத்திடல் அரகலய போராட்டங்கள் வெறும் சம்பவங்களாகவே கடந்து போய் விட்டிருக்கின்றன. அங்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞர் யுவதிகள் எங்கே என தேட வேண்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இந்த ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் குறித்து,  பெளத்த  சிங்கள இளைஞர் யுவதிகள் மெளனம் காத்து வருகின்றனர். இனத்தால் அனைவரும் இலங்கையர்களே என குரல் கொடுத்த அவர்கள், மதத்தால் தாம் என்றும் தனித்துவமான  பெளத்தர்களே என விலகி நிற்கின்றனர்.

கடும்போக்காளர்களாலும் பிக்குகளினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த செயற்பாடுகளை கண்டித்து சமூக ஊடகங்களில் கூட இவர்கள் குரல் கொடுக்கத் தயங்குகின்றனர்.

அதே வேளை வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெளத்த அடையாளங்களை திணிக்க முயலும் இந்த சம்பவங்களுக்கு எதிராக நாட்டின் வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வீதிக்கு இறங்கினாலும், சமூக ஊடகங்களில் கருத்து சொன்னாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்து விடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை முற்றாகவே  இல்லாமலாக்கி விடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களின் வழிபாட்டிடங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டும் உருவச்சிலைகள் உடைத்தெறியப்பட்டும் வந்தாலும் மிக தாமதமாகவே ஜனாதிபதி அது குறித்து வாய் திறந்திருக்கிறார். வெடுக்குநேறிமலை பிரச்சினைக்கு புத்தாண்டின் பின்னர் தீர்வு என அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு என 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கூறியவரும் இதே ஜனாதிபதி என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனப்பிரச்சினைக்கான தீர்வே முழு நாட்டுக்குமான தீர்வு எனக் கூறியிருந்தார். தமிழர்களுக்கு தீர்வு என்ற விடயத்தில்  இங்கு அனைவருமே தாம் கூறிய  வார்த்தைகளை காப்பாற்றுகின்றவர்களாக இல்லை.

இனப்பிரச்சினைக்கு  தீர்வுவொன்று வந்து விடக்கூடாதென நினைக்கும் பேரினவாதிகள் தான்  இவ்வாறு மதங்களுக்கிடையிலான நல்லுறவுகளை சிதைக்கும் வண்ணம் நடக்க ஆரம்பித்துள்ளனரோ தெரியவில்லை.

இனப்பிரச்சினை தீர்ந்தால் எமது நாட்டில் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு வந்து விடும் என ஜனாதிபதி பேசினால் மாத்திரம் போதாது. அதற்கு முன்பு,  இங்கு தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ‘வழிபாட்டிட ஆக்கிரமிப்பு’  செயற்பாடுகளை அவர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதியின் வார்த்தைகளை நம்புவதற்கு இங்கு எவருமே தயாரில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது.