பாரபட்சமற்ற விசாரணைகளை துரித கதியில் நடத்தி நீதியை பெற்றுத்தருமாறு ஜனாதிபதியிடம் றிசாத் வேண்டுகோள்

102 0

அம்பாறை மாவட்டத்தில்  காணி உரிமைக்காகப் போராடி வரும் பணிக்குழுவின் பணிப்பாளர் உட்பட அதன் அங்கத்தவர்களைக் கடத்திச் சென்று தாக்கி வன்முறை செய்த காட்டு மிராண்டிகள் மீது துரித கதியில் பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன்  ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித எழுச்சி அமைப்பு மற்றும் காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணி ஆகியவற்றின் பணிப்பாளரான கே. நிஹால் அஹமட் உட்பட அவருடன் சென்ற குழுவினர் கடத்தப்பட்டு தாக்கி துன்புறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் அம்பாறை மாவட்டத்தில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன்  ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காணி உரிமைகளுக்காகப் போராடும்  அமைப்புகளின் பிரதிநிதிகளை கொடூரமாகத் தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும்.

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான காணிகள் கல்ஓயா திட்டத்தின் கீழ் ஹிங்குரான சீனி கூட்டுறவினால் சுவீகரிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

கடந்த டிசம்பரில், அம்பாறை மாவட்ட காணி உரிமைப் பணிக்குழுவுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கல்ஓயா தோட்ட நிர்வாகத்தின் அநீதியான நிர்வாகத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக உங்களின் தேசிய உணவு உற்பத்தி ஆலோசகர் சுரேன் பட்டகொடவிடம் கையளிக்கப்பட்டது.

அதற்கு உங்களின் ஜனாதிபதி செயலகத்திலிருந்து எவ்வித பதிலும் வராததால், அம்பாறை காணி உரிமை செயலணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 2023 ஏப்ரல் 05ஆம் திகதி வெள்ளகல் தோட்டை மல்லிகைத்தீவுக்கு விஜயம் செய்து, தகவல்களை சேகரித்தனர்.

அப்போது ஒரு குழுவினால் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

கல்லோயா தோட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 25 பேர் உறுப்பினர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

அந்தவகையில், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு மேலதிகமாக இந்த விடயத்தையும் உறுப்பினர்கள் எனது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

மேலும், கல்ஓயா பெருந்தோட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் செயற்பாடுகள் கூரிய ஆயுதங்களை ஏந்தியும் அப்பாவி பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் மனிதாபிமானிகள் மீதும் தாக்குதல் நடத்தி பிரதேசத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அமைப்பின் பணிப்பாளர் நிஹால் மற்றும் இந்த அமைப்பின் ஆலோசகர் இப்திகார் (சீனி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர்) இரண்டு நாட்கள் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் (2023.04.07) சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தக் காணி ஆக்கிரமிப்புகளினால் அம்பாறை மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வகையான நிறுவன அடாவடித்தனங்கள் மீண்டும் இன வன்முறையின் அத்தியாயமாக மக்களால் பார்க்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைகளை துரித கதியில் நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு நீங்கள் பணிப்புரை வழங்கினால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.