பொலன்னறுவை கடவலவெவ பிரதேசத்தில் காசிப்புக் கடத்தல்காரர் ஒருவரிடம் 9,000 ரூபாவை இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் மின்னேரிய பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கசிப்பு கடத்தல்காரர் என்று கூறப்படும் நபரிடம் தடையின்றி கடத்தலை தொடர மூன்று போத்தல்கள் மதுபானம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தன்னிடம் மதுபானம் இல்லாததால், மூன்று போத்தல்களின் பெறுமதிக்கு பணம் தர முடியுமென கடத்தல்காரர், சந்தேக நபர்களான பொலிஸாரிடம் கூறியதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு இணக்கம் தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் குறித்த பணத்தை பெற்றுக் கொண்டபோது சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.