இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமாகியுள்ளார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள இல்லத்தில் 13ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்று பூதவுடல் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகப் பரப்பில் இருந்து பேனா முனையின் துணையோடு ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பொ.மாணிக்கவாசகம் என்ற ஊடக ஆளுமையை நாம் இழந்துவிட்டோமென யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிக்;குறிப்பில் தெரிவித்துள்ளது.
யுத்த காலங்களிலும் யுத்தத்திற்குப் பின்னரான காலங்களிலும் செய்திகளை நடுநிலை தன்மையோடு, உள்ளதை உள்ளதாகச் சொல்லி, தமிழ் மக்களின் அவலங்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் மாணிக்கவாசகமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணித்துள்ளார்.அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டவர்கள் வவுனியாவில் வாழ்ந்துவருகின்றனர்.