தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

119 0

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(09.04.2023)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தேர்தல், மாகாண சபை தேர்தல் என்பன நடாத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக தேர்தல் இடம்பெற்ற வரலாறுகள் உண்டு.

இந்த நிலையில் அரசாங்கம் பணம் இல்லை என காலத்தை இழுத்தடிக்காமல் கட்டம் கட்டமாக தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

நாடளாவிய ரீதியில் ஆளுநர்களின் அதிகாரம் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் வடக்கில் அது அச்சுறுத்தல் பாணியில் நகர்கின்ற நிலையே காணப்படுகின்றது.

வடக்கு ஆளுநர் அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டால் நாம் சட்டரீதியாக செயற்படுவோம்.

ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் கூறுவது முழுமையாக தவறானது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னர் இருந்த கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய இடைக்காலத்துக்கே பதவியில் இருக்க முடியுமே தவிர முன்னதாகவே தேர்தலை நடத்துவதற்கு உரிமை கிடையாது. இது அரசியலமைப்பில் தெளிவாக காணப்படுகிறது.

ஏனைய ஜனாதிபதிக்கு இருக்கின்றது போன்று நான்கு வருடங்களுக்கு பின்னர் தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரம் இடைக்கால ஜனாதிபதிக்கு கிடையாது.

தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டுமாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் அதன் பின்னரையே தேர்தலை நடத்த முடியும்.”என கூறியுள்ளார்.