பல மாதங்களுக்கு பிறகு அம்மாவை பார்த்ததும் கண்ணீர் விட்டழுதேன்

96 0

உக்ரைனிலிருந்து ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிற்கு கொண்டு செல்லப்பட்ட 31 சிறுவர்கள் மீண்டும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

உக்ரைன் தலைநகரில் பேருந்திலிருந்து இறங்கிய சிறுவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை கட்டித்தழுவுவதை பார்த்ததாக சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பலமாதகாலம் பிரிந்திருந்த துயரம் முடிவிற்கு வந்ததால் பலர் கண்ணீர்விட்டு அழுதனர் என சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் இரண்டுவார கால கோடைகால முகாமிற்கு சென்றோம் ஆனால் அங்கு ஆறுமாதகாலம் சிக்குண்டோம் என 13 வயது பொக்டன் தனது தாயை கட்டித்தழுவியபடி தெரிவித்துள்ளார்.

பேருந்திலிருந்து எனது தாயை பார்த்ததும் நான் அழுதேன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது மகிழ்ச்சியான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்

கடந்த ஆறுமாதகாலமாக தனது மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொக்டனின் தாயார் தெரிவித்துள்ளார்.

எந்த தொலைபேசி தொடர்பும் இருக்கவில்லை எனக்கு எதுவும் தெரியாத நிலை காணப்பட்டது மகனை துஸ்பிரயோகம் செய்கின்றார்களா என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் நான் காணப்பட்டேன் எனது கரங்கள் இன்னமும் நடுங்குகின்றன என தாயார் தெரிவித்துள்ளார்.

சேவ் உக்ரைன் என்ற மனிதாபிமான அமைப்பின்  முயற்சிகள் காரணமாகவே ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்கள் மீண்டும் தங்கள் குழந்தைகளுடன் இணைவது சாத்தியமாகியுள்ளது.

பலவந்தமாக ரஸ்யாவிற்கு நாடு கடத்தப்பட்ட சிறுவர்களை மீண்டும் பெற்றோருடன் இணைக்கும் நடவடிக்கைகளை ஐந்து தடவைகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சூட்கேஸ்கள் தங்கள் விளையாட்டுபொருட்களுடன் இந்த சிறுவர்கள் பெற்றோர்களுடன் கால்நடையாக எல்லையை கடந்து வந்துள்ளனர் இவர்களை தொண்டர்கள் பேருந்துகளில் ஏற்றி உக்ரைன் தலைநகருக்கு கொண்டுவந்துள்ளனர்.

எங்களின் கூட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நம்பமுடியாத உணர்ச்சிகரமான காட்சிகளை நாங்கள் பார்க்கின்றோம்இசிறுவர்கள் தங்கள் சொந்த மண்ணில் தங்கள் உறவினர்களின் கரங்களை நோக்கி ஒடுவதை பார்க்கின்றோம் அவர்களின் கண்ணீரை பார்க்கும்போது எங்களின் நடவடிக்கைகள் பயன்மிக்கவை என்பதை உணர்கின்றோம் என சேவ் உக்ரைன் அமைப்பின் ஸ்தாபகர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.